முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா...

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா...

டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், டி.ஆர்.பி ராஜாவுக்கு ஒதுக்கப்படும் துறை குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது, டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். டி.ஆர்.பி.ராஜாவின் அப்பாவும் எம்.பியுமான டி.ஆர்.பாலு குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

First published: