நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம், ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம், பரனூர், சேலம் - ஆத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. திருத்தணி – பட்டரைபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுங்கசாவடிகளிலும் கட்டணம் உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூர் - பள்ளிகொண்டா, வாணியம்பாடி உள்ளிட்ட வழிதடங்களிலும்
திருச்சி - சிட்டம்பட்டி, மதுரை - பூதக்குடி உள்ளிட்ட வழித்தடங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது.
இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்துகளின் கட்டணமும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை உருவாகி உள்ளது. சுங்கக்கட்டண உயர்வைக்கண்டித்து சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணலி மாத்தூர் சுங்கச்சாவடியிலும் கையில் கொடிகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Toll gate, Toll increases