காச நோய் தொற்று உள்ளோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த தொற்று பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
நெஞ்சக காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, இருமல் மூலம் பரவக்கூடிய நோயாகும். எனவே, காசநோயாளிகள் இருக்கும் இல்லத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்து கொடுக்கும் 3HP எனும் சிகிச்சைத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இதை தொடங்கி வைத்தார்.
காசநோயாளிகளின் வீட்டில் இருப்பவர்களுக்கு அந்நோய் பரவுகிறதா என குறுகிய அளவிலான ஆய்வு திருவள்ளூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. திருவள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வில், காசநோயாளியின் வீட்டில் இருக்கும் 37% முதல்-42% வரையிலான உறுப்பினர்களுக்கு நோய் பரவியிருந்தது. அதே போன்று புதுக்கோட்டையில் நடத்திய ஆய்வில் 23% முதல் 27% வரையிலான உறுப்பினர்களுக்கு காசநோய் பரவியிருந்தது.
இந்த காசநோய் சிலரில் சளி இருமல் என அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா உடலில் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் காசநோயாளியின் வீடுகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இனி முன்னெச்சரிக்கை மருத்துவ சிகிச்சை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. 3HP எனப்படும் மருந்தை வாரத்துக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டும்.
"மத்திய அரசு இந்த சிகிச்சைத் திட்டத்தை அறிமுகப்படுத்த அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கியது. கட்டாயம் என கூறவில்லை. ஆனால் உறவினர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தமிழகம் அதை இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்துகிறது. காசநோய் ஒழிப்புக்கு 9.42 கோடிரூபாய் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று சுகாதாரத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: குடிநீர், ஓ.ஆர்.எஸ் வசதி.... கோடை வெப்பம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...
காசநோய் ஒழிப்பு திட்டம் 2.0 என்ற ஆவணத்தை வெளியிட்டு பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் 2025ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றார்.
"2019 ம் ஆண்டு 1,08,344 லட்சம் பேர், 2020-ல் -68,922 பேர், 2021ம் ஆண்டு -82,680 பேர், 2022ம் ஆண்டு -91592 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டது. ஆறு மாத கால சிகிச்சைக்கு பிறகு காசநோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 2019ல் -91,405 பேர், 2020-ல் 57,391 பேர், 2021- 68,810 பேர், 2022-ல் 50,592 பேர் குணமாகி உள்ளனர்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்வது மிக பழைய முறையாகும். அதை விட NAT எனப்படும் molecular test செய்வதன் மூலம் காசநோயை துல்லியமாக கண்டறிய முடியும். அந்த பரிசோதனையை அனைவருக்கும் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ma subramanian