இந்தியாவில் உள்ள 30 முதலமைச்சர்களில், 29 பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து மதிப்பில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 14வது இடத்தில் உள்ளார்.
இந்திய முதலமைச்சர்களின் சொத்துக்கள், குற்ற வழக்குகள், கல்வித் தகுதி உள்ளிட்டவற்றை ஜனநாயக சீர்திருத்த சங்கம் பகுப்பாய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. தேர்தலின் போது முதலமைச்சர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் பெறப்பட்ட தகவல்களை கொண்டு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி சொத்துப்பட்டியலில், ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி 510 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏடிஆர் அறிக்கையில், ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 373 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டும் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டும் அவர் அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க : திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிடும் நேரம்... அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 163 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், ஒடிசாவின் நவீன் பட்நாயக் 63 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு அடிப்படையில் 14வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 8.88 கோடி ரூபாய் ஆகும். இந்த பட்டியலில் குறைந்தபட்சமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் மம்தா பானர்ஜியை தவிர 29 பேர் கோடீஸ்வரர்கள் என கூறப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளை பொறுத்தவரையில், தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் மீது 37 தீவிர வழக்குகள் உட்பட 64 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது. கே.சி.ஆருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது 10 கடுமையான குற்றங்கள் உள்பட 47 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் 11 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. மம்தா பானர்ஜி உள்பட 17 முதலமைச்சர்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை. கல்வித் தகுதியை பொறுத்தவரை 37 சதவிகித முதலமைச்சர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள், 14 சதவிகிதம் பேர் தொழில்முறை பட்டதாரிகள் என்றும் 30 சதவிதிகம் பேர் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தலா மூன்று சதவீதம் பேர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, முனைவர் பட்டம் மற்றும் டிப்ளமோ பெற்றவர்கள். 10 சதவீத முதலமைச்சர்கள் 12வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.