முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை.. அதிமுக தூண்டுதலின் பேரில் போராட்டம்... அமைச்சர் நாசர் விளக்கம்..!

பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை.. அதிமுக தூண்டுதலின் பேரில் போராட்டம்... அமைச்சர் நாசர் விளக்கம்..!

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் நாசர் கருத்து.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் நாசர் கருத்து.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்தி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். பசும்பாலுக்கான விலை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கான விலை லிட்டர் ஒன்றுக்கு 41 ரூபாயிலிருந்து 52 ரூபாயாகவும் உயர்த்த வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், பாகல்பட்டியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், மாடுகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால் கூடுதல் விலை கேட்பதாக கூறினர். தனியார் நிறுவனங்கள் வழங்கும் தொகைக்கும், ஆவின் வழங்கும் தொகைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதால் விவசாயிகள் தனியாரை நாடுவதாக உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்களுடன் சேலம் ஆவின் துணை பொதுமேலாளர் வாணிஸ்ரீ பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல, ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  "மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.." - தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!

இந்நிலையில், ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருவதாகவும், ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை தவிர இதர சங்கங்களில் வழக்கமான அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கினர் எனவும் கூறியுள்ளது. ஆவின் பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடந்து நடைபெறும் எனவும், ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்முதல் விலையில் 3 ரூபாயை உயர்த்தியதை சுட்டிக்காட்டினார். ஒரே ஒரு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார். அதிமுக-வின் தூண்டுதலின் பேரில் ஒரு சில இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் அமைச்சர் நாசர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆனால், மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

First published:

Tags: Milk, Milk Production, Protest