கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் 34 வயதான விக்னேஸ்வரன். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்காக வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோர் சிவகாசியில் பொன்தேவி என்ற பெண் இருப்பதாகக் கூறி விக்னேஸ்வரனுக்காக வரன் பார்த்துக் கொடுத்தனர்.
பொன்தேவிக்கு தாய் தந்தை இல்லை என்றும், அவருக்கு ஒரு சித்தி மட்டுமே சிவகாசியில் உள்ளார் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய விக்னேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர், பொன்தேவியை கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள விக்னேஸ்வரன் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து பேசி திருமணத்தை முடித்துள்ளனர்.
திருமணம் முடிந்த 3-வது நாள் சிவகாசியில் உள்ள சித்தி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என பொன்தேவி கூறியுள்ளார். விக்னேஸ்வரனும் மனைவியை அழைத்துக் கொண்டு சிவகாசி சென்றுள்ளார். அங்கு சித்தியின் மகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்று கூறி 8,500 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருக்கும் துணிக்டை ஒன்றிற்கு பொன்தேவி சென்றுள்ளார்.
இதையும் படிக்க : நான்கு பேருடன் கள்ளக்காதல்... கண்டித்த கணவருக்கு மது விருந்து..
கடைக்குள் சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் உள்ளே சென்று தேடிப் பார்த்தவர் மனைவியைக் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பெண் தேவி, கண்மணி, பொன்தேவி என பல பெயர்களை வைத்துக் கொண்டு பலரை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பதாகவும், அவர் மீது ஏற்கெனவே திருமண மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளனர்.
இதையடுத்து விக்னேஸ்வரனிடம் புகாரைப் பெற்ற போலீசார் பொன்தேவி மற்றும் தரகர்கள் அமிர்தவள்ளி, பாலமுருகன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த கும்பல் மதுரையில் மற்றொரு மோசடி வேலையில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கரூர் தான்தோன்றிமலை போலீசாரிடமும் விக்னேஸ்வரன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அவர்களிடம் கைது செய்யப்பட்ட மூவரையும் சிவகாசி போலீசார் ஒப்படைத்தனர். விசாரணையில், பொன்தேவிக்கு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, 38 வயது நபருடன் ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த, 28 வயது இளைஞரையும், பொன்தேவி இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். தற்போது மூன்றாவதாக விக்னேஷ்வரனிடம் தனது திருமண மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
சிக்கிய பெண் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக காதல் பாட்டுக்களை பாடி ஆண்களை கவரும் விதமாக வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த வீடியோக்களைக் காட்டியே திருமண புரோக்கர்களும் பல ஆண்களை பேசி மயக்கி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.
விக்னேஸ்வரன் திருமணத்தின்போது பொன்தேவிக்கு 8 பவுன் அளவு தாலி செயின், மோதிரம், தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இரண்டரை லட்சம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளார். விசாரணைக்குப் பின் தான் பொன்தேவியின் சொந்த ஊர் தேனி மாவட்டம், கம்பம் என்பது தெரியவந்தது.
முதல் கணவருக்குத் தெரியாமல் 2வது திருமணத்தையும், 2வது கணவருக்கும் தெரியாமல் மூன்றாவது திருமணத்தையும் பொன்தேவி நடத்தியுள்ளார். ஒவ்வொரு திருமணத்திற்கும் புது புதுப் பெயர்களை தனக்கு சூட்டிக் கொண்டுள்ளார். இந்த கும்பல் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறார்கள் என போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
2 குழந்தைகளுக்கு தாயான பெண் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன் (கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrested, Crime News, Marriage, Women