2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 210க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. அதில், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடர்வதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் இன்னுயிர் காக்கும் 48 மணி நேரத் திட்டம் ஆகியவை பிரதானமானதாகும்.
மேலும், 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் மதிப்பில் நகைக் கடன் தள்ளுபடி ஆகியவை அடங்கும். முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டது, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, தூத்துக்குடி மற்றும் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல் தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ன. இதேபோல் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் அங்கக வேளாண்மை கொள்கை வெளியிடப்பட்டது. இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன்கள் ரத்து செய்யப்பட்டு 25 ஆயிரத்து 219 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், பெண் ஓதுவார்களை பணியில் அமர்த்தியதும் இந்த ஆட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் 75 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த திமுக அரசு, பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது .
கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது,அதேபோல் மதுரையில் கலைஞர் நினைவு நூலகமும் திறக்கப்பட இருக்கிறது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 12 மணி நேர வேலை மசோதாவை நிறைவேற்றி பின்னர் திரும்பப்பெற்றது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிய திமுக அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, DMK