தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்படி, சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம் பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் பகுதியில் பெய்த மழையால், அங்குள்ள அரசின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. நெல்மணிகள் முளை விடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நனைந்த மூட்டைகளை அரிசி ஆலைகளுக்கு விரைந்து எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : சென்னையில் விடிய விடிய மழை..!
இதே போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுகளில் மழை கொட்டித்தீர்த்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி டவுன், முள்ளிப்பட்டு, தேவிகாபுரம், எஸ்.வி.நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் கனமழை பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. சுற்றுவட்டார கிராமங்களில் இடியுடன் மழை பெய்தது.
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பகலில் மழை பெய்த நிலையில், இரவிலும் வெளுத்து வாங்கியது. பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் இடிவிழுந்து லலிதா என்பவரது பழைய ஓட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் எரிந்து சேதமானது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்த்த மழையால், பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், மழையில் குடை பிடித்தபடி வண்ண வண்ண மலர்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். திருநெல்வேலி மாநகரில் இடி மின்னலுடன் கொட்டிய மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியது. தென்காசி மாவட்டம், குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேகமலை வனப்பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். கோவை நகரில் பெய்த மழையால், சாலைகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாவட்டம், எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
கடலூரில் இரவு முழுவதும் 7 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. கடலூர், ரெட்டிச்சாவடி,நெல்லிக்குப்பம், பாலூர், ஆலப்பாக்கம், பண்ருட்டி புதுப்பேட்டை,நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடலூர் அரசு மருத்துவமனை சாலை, பேருந்து நிலையம், துறைமுகம் சிதம்பரம் சாலை உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இதனிடையே, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று அதிகாலை 4.30 மணி வரையான 20 மணிநேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் பகுதியில் 10.6 செ. மீ. மழையும்,
கோவை மாவட்டம் வால்பாறையில் 7.8 செ. மீ. மழையும் பதிவானதாக குறிப்பிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 7.3 செ. மீ. மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழக பகுதியில் 7 செ. மீ. மழையும் பெய்ததாக தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூரில் 6.8 செ. மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, Rain Update, Tamil Nadu, Tamil News, Weather News in Tamil