முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத சிபிஎஸ்இ பள்ளிகள்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத சிபிஎஸ்இ பள்ளிகள்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

புகார் வந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி  மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிக்கு எதிராக  நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழக  பள்ளிக்கல்வித் துறை தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெரிய காஞ்சிபுரம் கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2001 ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 96 குழந்தைகள் பலியான சம்பவத்தையடுத்து, நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் வகுத்த விதிகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற  பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்ததை குறிப்பிட்டுள்ளார்.

இதே சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது என்றும் கல்வி உரிமைச் சட்டத்திலும், அரசு அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளி கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவது, கட்டிட ஸ்திரத்தன்மை சான்று பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்தச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளதாகவும்  மனுவில் தெரிவித்துள்ளார்

ஆனால், மேன்ஷன் போல குறுகிய அறைகளுடன், எந்த  அங்கீகாரமும், ஒப்புதலும் இல்லாமல், காஞ்சிபுரத்தில் 'விதை பப்ளிக் ஸ்கூல்' என்ற பள்ளி செயல்பட்டு வருவதாகவும், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தகுதியான கட்டிட வசதி இல்லாமல்,  பொய் விளம்பரங்கள் மூலமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் இந்த தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கையை துவங்கியுள்ளதாகவும், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

top videos

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    First published:

    Tags: Chennai High court, Department of School Education, School