முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி...

டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி...

டிஆர்பி ராஜா

டிஆர்பி ராஜா

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா, தற்போது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது.  கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை இன்று  வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வரின் பரிந்துரைப்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா 2011 ஆம் ஆண்டு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக தேர்வானார்.  2016, 2021 என தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்றுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த ஆரம்பம் முதலே டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

top videos

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். என்னதான் டி.ஆர்.பாலுவின் மகன் என்றாலும், அவருடைய உழைப்பிற்கு கிடைத்த பரிசே இந்த பதவி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.  இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் இல்லை என்ற பேச்சுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    First published: