Tamil Live Breaking News : 14 நகரங்களில் சதமடித்த வெயில்..!

Tamil Live News: : உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

0மேலும் படிக்க ...
17 Apr 2023 20:26 (IST)

அண்ணாமலையை சும்மா விடுவோமா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பிய அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு உதயநிதி, “ என்னிடம் மட்டும் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள். அண்ணாமலையிடம் ஸ்கூல் டீச்சர் பேசுவதை கேட்பது போல இருந்துவிட்டு வருகிறீர்கள். அண்ணாமலை மீது நானும் மான நஷ்ட வழக்கு தொடரலாம் என்று உள்ளேன். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை  சும்மா விடுவோமா?” என்றார்.

17 Apr 2023 19:53 (IST)

14 நகரங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டின் 14 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி பாரன் ஹீட் பதிவானது. கரூர், பரமத்தி, சேலம், மதுரை, வேலூர், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல், திருத்தணியிலும் 100க்கு மேல் வெயில் பதிவு.

17 Apr 2023 19:23 (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

17 Apr 2023 18:10 (IST)

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்.. இபிஎஸ் பேட்டி..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுரையில் நடைபெறும் மாநாடு அகில இந்திய தலைவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் மாநாடாக அமையும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டு மூன்று மாதங்களில் அந்த பணிகள் முடிந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடக தேர்தலுக்கு முன்பு சின்னம் கிடைக்கப் பெற்றால், அதிமுக போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

17 Apr 2023 17:53 (IST)

பொன்னியின் செல்வன் சர்ச்சை... மணிரத்னம் விளக்கம்..!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது ராஜராஜ சோழனை இந்து மன்னனாக காட்டியதாக எழுந்த சர்ச்சை குறித்த நியூஸ் 18 தமிழ்நாடு கேள்விக்கு மணிரத்னம் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் “இதற்குள் எதற்காக மதத்தை கொண்டு வருகிறீர்கள். இது வரலாற்று படம். ராஜராஜ சோழனின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். கல்கி எழுதியதை வைத்து உருவாக்கிய படம் இது. இதை தாண்டி அநாவசியமான சர்ச்சைகள் தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

 

17 Apr 2023 17:25 (IST)

உலக புத்த மாநாடு... பிரதமர் தொடங்கி வைக்கிறார்..!

ஏப்ரல் 20 மற்றும் 21யில் டெல்லியில் நடைபெறவிருக்கும் உலக புத்த மாநாடை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

17 Apr 2023 16:42 (IST)

வருமுன் காக்கும் அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#HealthcareAtDoorstep எனும் நோக்கத்துடன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், தொடக்கத்திலேயே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும் அது வழிவகுக்கிறதென மாநிலத் திட்டக்குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மக்களை நாடிச் செல்லும் அரசு மட்டுமல்ல, வருமுன் காக்கும் அரசு” என்று தெரிவித்துள்ளார்.

17 Apr 2023 16:13 (IST)

பற்களை பிடுங்கிய விவகாரம்... பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு...!

 

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு. நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு நெல்லை எஸ்.பி சிலம்பரசன் பிரத்யேக தகவல்

17 Apr 2023 15:43 (IST)

ராமநாதபுரம் செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

வரும் 18, 19 ஆகிய இரு நாட்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

17 Apr 2023 15:23 (IST)

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும்.. திமுக எம்.எல்.ஏ பேச்சு..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் சட்டமன்றத்தில் மறைமுகமாக வலியுறுத்தி பேசியது திமுக எம்.எல்.ஏக்களிடையே வரவேற்பை பெற்றது. அவர் பேசும்போது, “அமைச்சர் உதயநிதியின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களை கனிவாக அணுகும் முறை, செயலாற்றும் பாங்கு ஒரு துறையோடு நின்றுவிடக்கூடாது. முதலமைச்சரின் துணை நின்று அனைத்து துறைகளிலும் மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

 

17 Apr 2023 15:02 (IST)

பெரம்பலூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்..

பெரம்பலூர் துறைமங்கலம் பெரிய ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் இறப்பிற்கான காரணம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும், நகரமன்ற அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த மீனை பொது மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

17 Apr 2023 13:23 (IST)

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவன் சீனிவாசன், கடந்த 2017ம் ஆண்டு சைக்கிளில் சென்ற போது அரசு பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு 6,34,000 ரூபாய் வழங்க ராணிப்பேட்டை மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இழப்பீடு வழங்காததால் ஆற்காடு நோக்கி சென்ற அரசு பேருந்தினை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு எடுத்து வந்தனர்.

17 Apr 2023 12:10 (IST)

சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி

சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 15ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

17 Apr 2023 11:22 (IST)

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

 

17 Apr 2023 11:09 (IST)

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - மா.சுப்பிரமணியன்

ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகத்தில் விரைவாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

17 Apr 2023 11:08 (IST)

கோவை மருதமலை - ஆன்மீக சுற்றுலா

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில் சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மீக சுற்றுலா தலமாக மேம்படுத்த பரிந்துரைகள் பெறப்பட்டு நிதி நிலைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..

17 Apr 2023 10:32 (IST)

துபாய் தீ விபத்து - ரூ.10 லட்சம் நிவாரணம்

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

17 Apr 2023 09:47 (IST)

ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்.. கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது!..

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அட்டியா பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரயிலில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பைகளில் 18 கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கஞ்சா கடத்திய கர்நாடகா மாண்டியா பகுதி சேர்ந்த சுமந்த் (வயது 21) அன்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு

17 Apr 2023 09:41 (IST)

தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாள் - முதலமைச்சர் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்ன மலையின் 267 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிண்டியில் அவரது  சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி,மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இருந்தனர்.

17 Apr 2023 08:53 (IST)

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்

பாஜகவில் இருந்து விலகிய கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். – முழுவிவரம்

കൂടുതൽ വായിക്കുക