Tamil Live Breaking News : தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்!

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க ...
16 May 2023 21:55 (IST)

4 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி. (ADGP) அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்

16 May 2023 21:08 (IST)

EWS ஒதுக்கீட்டை உறுதி செய்யும் தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

உயர்சாதி ஏழைகளுக்கான 10% (EWS) இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

16 May 2023 20:55 (IST)

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் உள்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கடலூர் ஆட்சியராக அருண் தம்புராஜ், அரியலூர் ஆட்சியராக ஆன்னி மேரி ஸ்வர்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோல் கிருஷ்ணகிரிக்கு தீபக் ஜேக்கப், புதுக்கோட்டைக்கு மெர்சி ரம்யா, நாமக்கலுக்கு உமா ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சி மாவட்டத்திற்கு கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டுக்கு கமல் கிஷோர், மதுரைக்கு சங்கீதா, சிவகங்கைக்கு ஆஷா அஜித், ராமநாதபுரத்துக்கு விஷ்ணு சந்திரன் ஆகியோர் ஆட்சியர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் சேலத்திற்கு கிறிஸ்துராஜ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு பூங்கொடி ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

16 May 2023 20:19 (IST)

கள்ளச்சாராய பலி : விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் என நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

16 May 2023 19:19 (IST)

சாராய வியாபாரிக்கு குண்டாஸ்

விழுப்புரம் மரக்காணம் சாராய உயிரிழப்பு விவகாரத்தில்,
திண்டிவனத்தை சேர்ந்த சாராய வியாபாரி மரூவூர் ராஜா மீது குண்டர் சடடத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட்டுள்ளார்.

16 May 2023 19:07 (IST)

ஸ்டாலினை பதவி விலக சொல்ல எடப்பாடிக்கு அருகதை இல்லை: டிடிவி

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், “ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி அப்போது பதவி விலகி இருந்திருந்தால், இன்று கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை இருந்திருக்கும்.” என தெரிவித்தார்.

16 May 2023 17:56 (IST)

தி.நகர் ஆகாய மேம்பாலம் : மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து – மாம்பலம் ரயில் நிலையம், செல்வதற்காக ஆகாய மேம்பாலத்திற்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து, வரும் நபர்கள் உஸ்மான் சாலைக்கு செல்வதற்காக மின் தூக்கிகளும் (லிஃப்ட்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

28.45 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்றுள்ளது. 570 மீட்டார் நீளமும், 4.20 அகலம் கொண்ட இந்த பாலம் பலருக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

16 May 2023 17:32 (IST)

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விஷ சாராய பலி தொடர்பாக தமிழகத்திற்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

16 May 2023 17:19 (IST)

விஷச்சாராயம் மேலும் இரு உயிரிழப்பு ; உயிரிழப்பு 7 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரை அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்த ஜம்பு மற்றும் கயப்பாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

16 May 2023 16:21 (IST)

நான் ஆட்சிக்கு வந்தால் 2 மாதங்களில் கொடநாடு வழக்கு விசாரணையை முடிப்பேன் - சீமான் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம்… கள்ளச்சாராயம் சாவு வரவில்லை என்றால் இன்று இவ்வளவு கள்ள சாராய வழக்கு பதிவு செய்திருக்க மாட்டார்கள்.”என்றார்.

மேலும் “நான் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களில் கொடநாடு வழக்கை விசாரணை செய்து முடிப்பேன் என்ற இப்போதைய முதல்வர் இரண்டு ஆண்டு காலம் ஆகிவிட்டது என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.

 

16 May 2023 16:02 (IST)

மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டவை கள்ளாசாரயம் அல்ல... மெத்தனால் - டிஜிபி தகவல்

விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவம் தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விற்கப்பட்டது இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும் ஆலைகளை பயன்படுத்தப்படும் மெத்தனால் என்பதும் தடய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 May 2023 15:46 (IST)

கர்நாடக அமைச்சரவை - பதவியேற்பு தேதி அறிவிப்பு

கர்நாடக அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு. முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை

16 May 2023 15:33 (IST)

பள்ளி கல்வித்துறை உத்தரவு

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்று பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், இதர உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு

16 May 2023 15:02 (IST)

அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' - ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த ‘அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’ ஜூன் 7ம் தேதி டிஸ்னி +  ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

16 May 2023 14:42 (IST)

கள்ளச்சாராய பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தொல்.திருமாவளவன் சந்தித்து நலம் விசாரிப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

16 May 2023 14:27 (IST)

அதிமுக பொது குழு தீர்மானங்கள் செல்லும் : இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

இந்திய தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொது குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் செல்லும் என வெளியிட்டுள்ளது

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் நடைபெற்ற பொது குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால் இந்திய தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரித்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

16 May 2023 13:58 (IST)

அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகள் பட்டியல் வெளியீடு..

தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிக்கைபடி  அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் எண்ணிக்கை – 4

1) திமுக
2) அதிமுக
3) தேமுதிக
4) இந்திய கம்யூனிஸ்ட்

தேசிய கட்சிகள்
1. காங்கிரஸ்
2. பாஜக
3. மார்க்சிஸ்ட்
4. ஆம் ஆத்மி
5. பகுஜன் சமாஜ்

16 May 2023 13:51 (IST)

இபிஎஸ்ஸுடன் இணைந்து போராடத் தயார் - திருமாவளவன்

மது விலக்குக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி போராடினால், நாங்களும் இணைந்து போராடத் தயார். மது விலக்கை அமல்படுத்தி கள்ளச்சாராய ஒழிப்பை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்த வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

16 May 2023 13:31 (IST)

திருப்பதி... இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்..

கோடை விடுமுறை துவங்கிய பின் கடந்த இரண்டு நாட்களாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருப்பதி மலையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.

சுமார் மூன்று கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

16 May 2023 12:52 (IST)

கோவையில் செயின் பறிக்க முயன்ற சம்பவம்... இருவர் கைது..

கோவையில்  நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் காரில் வந்து செயின் பறிக்க முயன்ற சம்பவம். சக்திவேல்(25), அபிஷேக் (29) ஆகிய இருவரை கைது செய்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை. அபிஷேக் காரை ஓட்டி வர, சக்திவேல் நகை பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

 

நகை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் நேற்று வெளிவந்திருந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..

കൂടുതൽ വായിക്കുക