Tamil Live Breaking News : மனோபாலா உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

மேலும் படிக்க ...
03 May 2023 21:59 (IST)

தொடர் விபத்துகள் எதிரொலி - ஏற்காடு செல்ல கட்டுப்பாடு

 

தொடர் விபத்துகளின் எதிரொலியாக ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும்.

மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனும் துறை அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். – மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு.

03 May 2023 21:15 (IST)

நடிகர் சரத்பாபு உடல்நிலை - குடும்பத்தினர் விளக்கம்

நடிகர் சரத்பாபு காலமானதாக  சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

03 May 2023 19:55 (IST)

மனோபாலா உடலுக்கு அமைச்சர் உதயநிதி அஞ்சலி.

மறைந்த நடிகர் மனோபாலா உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி. பின்னர் பேட்டியளித்த உதயநிதி, “மனோபாலா நல்ல மனிதர், எதார்த்தமான மனிதர், அவரின் திடீர் மறைவு மன வலியை தருகிறது” என்று தெரிவித்தார்.

03 May 2023 18:32 (IST)

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி..!

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுபோலவே கவுண்டமணி, செந்தில், சின்னி ஜெயந்த், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

03 May 2023 17:50 (IST)

திருச்சியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லூர்,  சமயபுரம், நம்பர் ஒன் டோல்கேட், லால்குடி, சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

03 May 2023 17:26 (IST)

மால்களில் டாஸ்மாக்.. எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி பதில்

அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் மால்களில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவன வருமானத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்தியது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை. செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

– எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

03 May 2023 17:19 (IST)

ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது - மனோபாலா மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது. மரணத்தின் இறுதிவரை இயங்கிக்கொண்டிருந்த மனோபாலா இன்று இல்லை.  திரையின் எல்லாத் துறைகளிலும் இயங்கியவன்; எல்லாரோடும் பழகியவன் இனி இல்லை ஒல்லியாய் இருப்பவர்கள் நீண்டநாள் வாழ்வார்கள் என்ற மனிதக் கணக்கை மரணம் உடைத்துவிட்டது என் ஆழ்ந்த இரங்கல் – கவிஞர் வைரமுத்து இரங்கல்

03 May 2023 16:37 (IST)

மனோபாலா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்..!

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன் – நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

03 May 2023 16:20 (IST)

தஞ்சையில் மீண்டும் மழை..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு,  பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது

03 May 2023 15:57 (IST)

மனோபாலா மறைவு... சீமான் இரங்கல்

காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா  மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அண்ணன் மனோபாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– சீமான்,  நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்

03 May 2023 15:11 (IST)

மனோபாலா மறைவுக்கு காரணம் இதுதான்... மகன் ஹரீஷ் வெளியிட்ட தகவல்

“அப்பா மனோபாலா நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார். பிசியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும்,  சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது”

– மனோபாலா மகன் ஹரிஷ் தகவல்

03 May 2023 15:05 (IST)

நடிகர் மனோபாலா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல்

திரைப்பட இயக்குனரும், நடிகருமான  மனோபாலாவின் அகால மறைவுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான  மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்

03 May 2023 14:51 (IST)

நடிகர் மனோபாலா மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான  மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.  மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

03 May 2023 14:42 (IST)

மிஸ் யூ மனோபாலா சார்... நடிகர் கார்த்தி

நடிகர் மனோபாலா மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா இடங்களிலும், எல்லோருக்காகவும் இருந்த மனிதர் அவர். மிஸ் யூ மனோபாலா சார். ஆழ்ந்த இரங்கல் – நடிகர் கார்த்தி ட்வீட்

03 May 2023 14:16 (IST)

மனோபாலா உடல் நாளை தகனம்..!

மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் அவருடைய  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். மனோபாலா உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தகவல்.

03 May 2023 13:57 (IST)

மனோபாலா திரை பயணம்

பாரதிராஜா இயக்கத்தில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மனோபாலா. இவர் இறுதியில் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்த நிலையில் மறைந்துள்ளார்.

03 May 2023 13:43 (IST)

அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவால் காலமான மனோபாலாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர், ‘பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

03 May 2023 13:37 (IST)

நடிகர் மனோபாலாவின் படங்கள்

காஞ்சனா, அரண்மனை, சந்திரமுகி, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் மனோபாலா.

மேலும் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த 20ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

03 May 2023 13:31 (IST)

நடிகர் மனோபாலா காலமானார்

ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் ரஜினிகாந்தை வைத்து 1987யில், ‘ஊர்காவலன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இவருக்கு வயது 69.

03 May 2023 13:29 (IST)

நடிகர் மனோபாலா காலமானார்

கல்லீரல் பிரச்சனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.

കൂടുതൽ വായിക്കുക