டெல்லியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாத மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வுசெய்து போட்டிக்கு அனுப்புகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது.
இந்த போட்டிகள் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. ஆனால், அந்தப் போட்டியில் பங்குபெற வேண்டிய மாணவர்களை தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தேர்வுசெய்யவில்லை. இதனால், 247 மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. போதிய அவகாசம் வழங்கவில்லை என கல்வித்துறை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு விளக்கமளித்தது. மேலும் இது குறித்து உரிய விளக்கம் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
மேலும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வலியுறுத்தி அனுப்பப்ட்ட கடிதத்தை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கல்வித்துறை உயர் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படிக்க : முறையான தகவல் கிடைக்கவில்லை... தேசிய விளையாட்டுப் போட்டி விவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம்
இந்த விவகாரத்தில், தமிழக அரசிற்கு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவின் பேரில் மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, Sports, Tamil Nadu Sports Development Authority