முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் சூதாட்டம் தடை..மாநில அரசுக்கு அதிகாரமில்லை - நீதிமன்றத்தில் நிறுவனங்கள் வாதம்

ஆன்லைன் சூதாட்டம் தடை..மாநில அரசுக்கு அதிகாரமில்லை - நீதிமன்றத்தில் நிறுவனங்கள் வாதம்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரித் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்கக் கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மாநில அரசுக்குத் தடைச் சட்டம் நிறைவேற்ற அதிகாரமில்லை என்று நிறுவனங்கள் சார்பில் வாதிக்கப்பட்டது.

தமிழக அரசு கடந்த மார்ச் 23-ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடப்பட்டது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும், ரம்மி திறமைக்கான விளையாட்டாக உள்ளது என்றும் வாதிட்டார். அதனால், இந்த சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் கூறினார்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமாசுந்தரம், 1930-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தில் இணையதளத்தைச் சேர்த்து, 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது என்று கூறினார்.

அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது எனவும் வாதிட்டார்.தொடர்ந்து, திறமைக்கான விளையாட்டை சூதாட்டமாகக் கருத முடியாது எனவும், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல, திறமைக்கான விளையாட்டு எனவும் வாதிட்டார்.

ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் திறமைக்கான விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். மத்திய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு அதே பிரச்னை தொடர்பாகச் சட்டம் இயற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தற்போது, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட, ட்ரீம் 11 விளையாட்டு உள்ளது எனவும், நாடு முழுவதும் விளையாடப்படும் அதை எப்படி தடை செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.இதனைத்தொடர்ந்து, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சூதாட்டம் குறித்த இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தான் அதிகாரமில்லை என விளக்கினார்.

மாநில சட்டம், தடை மட்டும் விதிக்க முடியுமே தவிர, இணையதளத்தில் இருந்து நீக்க முடியாது எனவும், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.இந்த தளங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களைச் சீரழிக்கின்றன எனவும், அப்பாவி குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும், மனுதாரர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கக் கூடாது எனவும் வாதிட்டார்.

மற்றொரு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், மக்கள் பணத்தைப் பறிக்க ஆன்லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு என மறுத்தார். தொடர்ந்து, பங்குச் சந்தை இழப்பால் ஏற்படும் மரணங்களைக் காரணம் காட்டி, தடை விதிக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

Also Read : ஸ்டாலின் வாழ்க... ஒழிக... தஞ்சை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுகவினர் கோஷத்தால் பரபரப்பு

தற்போதைய நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் மேல் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

விசாரணையின் போது, மரணங்களை விளைவிக்கும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதற்குக் காரணமாக அமையும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வதில் என்ன தவறு உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மக்கள் நலன் தான் மிக முக்கியம் எனவும் தெரிவித்தனர்.

top videos

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜூன் 3 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கினார். அரசு தரப்பில் பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Chennai High court, Online rummy