முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. “வேறு ஏதோ நடந்திருக்கிறது”.. பாடகர் டி.எம்.கிருஷ்ணா கருத்து..!

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. “வேறு ஏதோ நடந்திருக்கிறது”.. பாடகர் டி.எம்.கிருஷ்ணா கருத்து..!

டி.எம்.கிருஷ்ணா

டி.எம்.கிருஷ்ணா

அங்கு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் வருகிறது என்றால் அது மட்டும் அங்கு நடக்கவில்லை, வேறு சில குற்ற நிகழ்வுகளும் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என டி.எம்.கிருஷ்ணா கருத்து.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார்கள் விஸ்வரும் எடுத்துள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நிலையை கூற சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என பாடகரும் கலாஷேத்ரா கல்லூரியுடன் நெருங்கிய தொடர்பு உடையவருமான டி.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,  “மாணவர்கள் உண்மையைக் கூற முன்வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்க கல்லூரி உள் கமிட்டி மட்டுமே போதுமானதாக இருக்காது. இந்த விவகாரத்தை யார் விசாரித்தாலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். கடந்த 24 மணி நேரமாக போராட்டம் நடைபெறுவதன் மூலம் அவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளது தெரியவருகிறது. பல ஆண்டுகள் காலஷேத்திராவில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். அங்கு இது போன்ற நிகழ்வு நடப்பது வருத்தம் அளிக்கிறது.

இது இன்றோ நேற்றோ நடக்கக்கூடிய பிரச்னையாக இல்லை. திடீரென்று வரும் பிரச்னையும் இல்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதனை அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ திசை திருப்புவதை தவிர்க்க வேண்டும். மதமோ, அரசியலோ கலக்க கூடாது.

இதுபோன்ற பிரச்சனைகளை மத்திய அரசு விசாரித்தாலும் மாநில அரசு விசாரித்தாலும் அல்லது எந்த ஒரு அரசு சார்ந்த விசாரணை அமைப்புகள் விசாரித்தாலும் அங்குள்ள மாணவிகள் பயமில்லாமல் தைரியத்துடன் பாதுகாப்புடன் நல்ல சூழ்நிலையில் கேள்வி கேட்கும் அதிகாரிகள் அதில் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்னையை கேள்வி கேட்க வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் குரு - சிஷ்யன் உறவு கேள்வி கேட்கக்கூடிய ஒன்றாக அமைய வேண்டும்.

top videos

    அங்கு பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் வருகிறது என்றால் அது மட்டும் அங்கு நடக்கவில்லை, வேறு சில குற்ற நிகழ்வுகளும் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது சில சமூக வலைதளங்களில் ஆண் மாணவர்களுக்கும் இதுபோல பிரச்சனை இருப்பதாக எழுதி இருக்கிறார்கள். இது இன்றோ நேற்று நடந்த நடக்கும் பிரச்சனை அல்ல நீண்ட நாட்களாக நடக்கும் பிரச்சினை” என்று குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Sexual assault allegations, Tm krishna