தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் விவரங்கள் திருடி பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தநிலையில், பள்ளி மாணவர்களின் விவரங்கள் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பேரம் பேசியது, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் கள ஆய்வில் அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாட்டில் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள், Emis என்ற பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் சேமித்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவ, மாணவிகளின் தரவுகள் திருடப்பட்டு, தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. தங்கள் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க விரும்பும் நிறுவனங்கள், திருடப்பட்ட தரவுகளை விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகிறது. அதன் மூலம் மாணவ, மாணவிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் சேர வற்புறுத்துவதாகவும் கல்வி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Emis தளத்தை பராமரிக்கும் நபர்கள் துணையுடன் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்கால தலைமுறைகளை மூளை சலவை செய்யும் நோக்கில், அவர்களின் தரவுகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறித்து, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கள ஆய்வு மேற்கொண்டது. விபரங்களை விற்பனை செய்யப்படும் நபரை தொடர்புகொண்ட போது, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 6 லட்சம் மாணவர்களின் விபரங்களையும், சிபிஎஸ்சிஇ பள்ளி மாணவர்கள் 35 ஆயிரம் பேரின் விபரங்களையும் விற்க தயாராக இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.
10,000 ரூபாயை ஜிபே மூலம் அனுப்பினால், தாங்கள் கொடுக்கும் மின்னஞ்சலில் உடனடியாக 20 மாவட்டங்களைச் சார்ந்த 6 லட்சம் பள்ளி மாணவர்களின் விவரங்களை தர தயாராக இருப்பதாகவும் அந்த நபர் கூறினார்.
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய மாணவர்களின் விபரங்கள் விற்பனை செய்யப்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா கவனத்துக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி கொண்டு சென்றது. இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தும் என்றும் தகவல் திருட்டு மற்றும் விற்பனை உறுதி செய்யப்படும்பட்சத்தில் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காகர்லா உஷா உறுதி அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.