ஆளுநர் மாளிகையில் நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துளார்.
ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டது தானா என்பதை விளக்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வியெழுப்பியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றி பொய் தகவலை வெளியிட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆளுநரின் விருப்ப உரிமைக்கு கட்டுப்பாடில்லை என்றும், அதனால் பெட்டி கிரான்ட்டில் வரம்பு மீறல் என்பதே அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் விருப்ப உரிமையின் கீழ் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அட்சய பாத்திரம் திட்டத்தின் செயல்பாடுகளை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தலைமையிலான குழு கண்காணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு லட்சக்கணக்கில் செலவு கணக்கு காட்டப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் கூறிய குற்றச்சட்டை மறுத்த ஆளுநர், குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி வந்த ஏழை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், அவர்களை பசியோடு அனுப்பக் கூடாது என்பதற்காக தேநீர் விருந்து அளித்ததாகவும் விளக்கமளித்துள்ளார். இதேபோன்று நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்களுக்கு தான் தேநீர் விருந்து அளித்ததாகவும் கூறியுள்ளார்.
சனாதன தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதே என்றும், இதனை ஒரு குறிப்பிட்ட ஒரு நம்பிக்கையுடன் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ராஜ் பவன் என்பதை லோக் பவன் என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையினர் மிகவும் புத்திசாலிகள் என்றும், அதேநேரம் அதிகளவில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தருமபுரம் ஆதினத்திற்கு சென்றபோது தனது பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது மற்றும் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என்று ஆளுநர் கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க: திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்கும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
ஆனால், தனிப்பட்ட முறையில் தனக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மு.க. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர் என்றும், அவர் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும், இருவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கமளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Governor