அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக வளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி எந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க இயலாத மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேண்டுமென்றால் அன்புமணி இராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேசி நாடு முழுவதும் மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வரலாமே? என்று தம்மைத்தாமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு எதிர்வினா எழுப்பியிருக்கிறார். அவரது அறியாமையை எண்ணி நான் வருத்தமடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
மது வணிகத்தை அதிகரிப்பதற்காக எந்திரங்களை வழங்கி, அவற்றை டாஸ்மாக் நிறுவனம் பயன்படுத்துவதை செந்தில் பாலாஜி ஆதரிக்கிறார் என்றால், மது ஆலைகளின் லாபம் அதிகரிப்பதற்காக மது வணிகம் பெருகுவதையும் ஆதரிக்கிறார் என்று தான் பொருள். அப்படியானால் செந்தில் பாலாஜி மதுவிலக்குத்துறை அமைச்சரா... மது விற்பனைத்துறை அமைச்சரா? என்று கேள்வி எழுப்பிய அவர், “மது நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன என்பதற்காக தானியங்கி எந்திரங்களை பயன்படுத்த செந்தில் பாலாஜி ஒன்றும் மது ஆலைகளின் முகவர் அல்ல, தமிழகத்தின் மதுவிலக்கு அமைச்சர்” என்று கூறியுள்ளார்.
மதுவிலக்குத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே செந்தில் பாலாஜி அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் தான் தீவிரமாக இருக்கிறார். அதற்காக அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தமிழ்நாடு என்றாலே குடிகார நாடு என்று பிறர் தூற்றும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தான் அண்ணா கூறினார். ஆனால், அவர் தொடங்கிய கட்சியின் ஆட்சியில் எங்கும் மது, எதிலும் மது என்ற நிலை உருவாகி வருகிறது. அறிஞர் அண்ணா மறைந்திருந்தாலும், இந்த சீரழிவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
இனிவரும் தலைமுறைகளாவது மதுவின் சீரழிவில் இருந்து மீட்கப்பட வேண்டும். அதற்கான ஒரே தீர்வு படிப்படியாகவோ, உடனடியாகவோ தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். அவற்றில் முதல் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி விட்டு, சமூகப் பொறுப்பு மிக்க ஒருவரை அமைச்சராக்கி அவரிடம் மதுவிலக்கை ஏற்படுத்தும் பொறுப்பை முதல்வர் ஒப்படைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, CM MK Stalin, PMK, Senthil Balaji