வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும் வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை எனவும், முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் கூறி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருவதாகவும், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்னமும் தொலைதூர கனவாக உள்ளதாகவும், பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Also Read: கைதிகளின் பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி பணியிடை நீக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருவதாகவும், தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை என்றும் கண்துடைப்பாக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில். வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Pudukkottai, Tamil News