தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினசரி 12 மணி நேரம் வேலை வழங்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் கடந்த வாரத்தில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக கூட்டணிக்கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த போதிலும், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், 12 மணிநேர வேலை மசோதா குறித்து அனைத்து தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொழிலாளர் வேலை சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சட்ட மசோதாவை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சாலைகள் அருகே நாளை மறுதினம் ஆர்ப்பாட்டமும், மே 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகன பிரசார பேரணியும் நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. மேலும், மே ஒன்பதாம் தேதி பெரும்திரள் ஆர்ப்பாட்டமும், அதை தொடர்ந்து மே 12ம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. இதனிடையே, 12 மணிநேர வேலை திட்டத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க; குட்டி சூர்யாவாக நடித்தது கயல் சீரியல் ஹீரோவா? வைரலாகும் மூவி சீன்!
இதேபோல, புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போராட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்தனர். இதனைத் தொடர்ந்து, பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்த வேண்டாம் என்று காவல் துறையினர் கேட்டுக் கொண்டதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், காவல் துறையினரின் சமாதானத்தை அடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி. கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.