விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ’நேற்றைக்கு நான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். நேரடியாக விவாதிக்க தயார் என அண்ணாமலை கூறியுள்ளார்.
நானும் விவாதிக்க தயார். சென்னையில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பேசுவதற்கும் தயாராக இருக்கிறேன். தமிழ் வளர்ச்சிக்கும், மும்மொழிக் கொள்கை ஆகியவற்றிக்கு யார் காரணம் என பேச தயாராக இருக்கிறேன். அண்ணாமலைக்கு வரலாறும் தெரியவில்லை. நடப்பு நிகழ்வு தெரியவில்லை.
அரசாங்கத்திற்கு தெரியாமல் நடந்து விட்டதா என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அரசுக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது. குறிப்பாக ஊட்டியில் துணைவேந்தர்களை அழைத்து புதிய கல்வி கொள்கை குறித்து பேசுவதற்காக ஜூன் மாதம் 5ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்று ஆளுசர் சார்பில் சுற்றறிக்கை சென்றுள்ளது. நான் இணை வேந்தர் எனக்கு அதுகுறித்து தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து அண்ணாமலைக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் அவர் ஆளுநருக்கு நெருக்கமாக உள்ளார்.
இது குறித்து அரசுக்கும் தெரியவில்லை. செயலாளருக்கும் தெரியவில்லை. குறிப்பாக உயர்கல்வித்துறையை பொருத்தவரையில் அரசுக்கு தெரியாமல் தான் எல்லாம் நடக்கிறது. தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை வகுக்க குழுவை அமைத்து அதனுடைய அறிக்கை வரவிருக்கும் இந்த காலகட்டத்தில் துணைவேந்தர்களை அழைத்து புதிய கல்வி குறித்து விளக்க ஆளுநருக்கு என்ன உரிமை உள்ளது.
அதுவும் தமிழக அரசின் கொள்கைக்கு எதிராக தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் இதனை செய்வது யார்? இதுவெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினார். அண்ணாமலை என்னை விவாதிக்க அழைக்கிறார். சென்னையில் எந்த இடத்தில் பொது கூட்டம் நடத்தி பேசலாம். பட்டிமன்றம் கூட நடத்தி பேசலாம். உண்மையில் பாஜகவினருக்கு தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கிடையாது.
இந்த ஜனநாயகம் மாண்பை ஒழித்துவிட்டு ஒற்றை ஆட்சியை கொண்டுவர வேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய நோக்கம் தான் இந்த தேசிய கல்விக் கொள்கை. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அண்ணாமலை நல்ல கருத்துக்களை சொன்னால் அதையும் பார்ப்போம்’ என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: குணநிதி ஆனந்தன், விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Ponmudi