தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 10.30 மணிக்குக் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து, டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி ராஜாவின் அரசியல் வரலாறு :
தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பி ராஜா, திமுக பொருளாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற டி.ஆர்.பி ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.
1976 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பிறந்த டி.ஆர்.பி. ராஜா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் பயின்றவர்.சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை படிப்பும், சென்னை பக்லைக்கழகத்தில் உளவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ள டிஆர்பி ராஜா, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ’வாக்காளர்கள் மனநிலை’குறித்து ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
Also Read : மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம்... யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு?
2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர், தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார். 2021 - 22 ஆம் ஆண்டு வரை திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியின் மாநிலச் செயலாளராகவும், 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் இருந்துள்ளார் டி.ஆர்.பி.ராஜா.
தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாதிருந்த நிலையில், டி.ஆர்.பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.