அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ள நிலையில், அதனைப்பிரித்து மேலும் ஒரு தேர்வு வாரியம் தேவையில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி) இரண்டாக பிரிக்கவும், சார்புநிலைப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய தேர்வு வாரியத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அரசு பணியாளர் தேர்வு முறையை வலுவிழக்கச் செய்யும் இந்த கருத்துரு பெரும் அதிர்ச்சியளிக்கிறது “ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுத்துறை பணியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர்கள், மருத்துவர்கள், சீருடைப் பணியாளர்கள் போன்றவர்களை தேர்வு செய்ய துறை சார்ந்த தனித்தனி தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வரும் போதிலும், பெரும்பான்மையான அரசுப் பணிகளுக்கு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த அமைப்பு சிக்கலின்றி செயல்பட்டு வரும் நிலையில், அதை இரண்டாக பிரிக்கவும், சார்பு நிலை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசின் எஸ்.எஸ்.சி போன்ற இன்னொரு தேர்வு வாரியத்தை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உயரதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வரும் மே 8 ஆம் நாள் சென்னையில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை இரண்டாக பிரிப்பதற்கு இப்போது எந்தவிதமானத் தேவையும் எழவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான ஆள்தேர்வு அட்டவணையின்படி நடப்பாண்டில் 29 வகையான பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவுள்ளது. இதில் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படாத நான்காம் தொகுதி (குரூப் 4) பணிகள் தவிர மீதமுள்ள 28 வகையான பணிகளுக்கு ஒட்டுமொத்தமாக தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 3,582 மட்டுமே. மொத்தமுள்ள 29 வகையான பணிகளில் 22 வகையான பணிகள் சார்புநிலைப் பணிகள் தான். அவை தவிர்த்து மீதமுள்ள 7 வகையான பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 500 க்கும் குறைவு தான் என்று கூறியுள்ளார்.
Also Read : வங்க கடலில் உருவாகிறது புதிய புயல்.. மழை வெளுத்து வாங்க வாய்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை தேர்வு செய்வதாக இருந்து, அதற்கு பணிச்சுமை அதிகமாக இருந்தால், இன்னொரு அமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயலாம். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மைக்காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 6,000 முதல் 7,000 பேரை மட்டுமே தேர்வு செய்கிறது. இது தேர்வாணையத்திற்கு எந்தவித பணிச்சுமையையும் ஏற்படுத்தாது. ஆவின், மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையமே தேர்ந்தெடுக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இயற்றப்பட்டது.
அப்போது கூட அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பணிச்சுமை எதுவும் இருப்பதாக தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது இப்போது புதிய வாரியம் அமைக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group Exams, Ramadoss, TNPSC