தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரையுமே சந்தித்து பேசாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக இருப்பது அதிமுக - பாஜக இடையேயான மோதல் தான். இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டதால், கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு ஏற்றாற்போல், அதிமுக கூட்டணியில் நீடிக்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்ற தகவல்களும் வெளியானது. இதனிடையே, நியூஸ் 18-க்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக - அதிமுக கூட்டணி நீடிப்பதாக கூறியிருந்தார். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதே கருத்தையே கூறியிருந்தார்.
இந்தச் சூழலில், தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நேரம் கேட்டதாகவும், அதற்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டும் சந்தித்து விட்டுச் சென்ற பிரதமர், எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசவில்லை. சமீபத்தில் அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதல்கள் நாடறிந்த ஒன்றே. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவன்... சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், அதற்கு அதிமுக ஒன்றுசேராததே காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக கூறியிருந்தார். அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், பாஜக தேசியத் தலைமை சார்பில் வாழ்த்து தெரிவிக்காததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றுசேர வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி இருக்கும்பட்சத்தில், இருவரையும் தனித்தனியாக சந்திப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால், பிரதமர் மோடி இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாம் என்பதாக பேச்சு எழுந்துள்ளது.
அதே நேரத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசிக்கொள்ளலாம் என பாஜக நினைப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கர்நாடக தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பதால் , ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்திப்பதை பிரதமர் மோடி தள்ளிவைத்திருக்கலாம் என்றும் மற்றொரு பார்வை முன்வைக்கப்படுகிறது. எது எப்படியோ, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையுமே பிரதமர் மோடி சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.