மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டனாக இருந்து வெற்றி பெற்றதாகக் கூறி மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் போலி கோப்பையைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழ் செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் பாபு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர். இவர் பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதாகவும், அதில் தான் கேப்டனாக பணியாற்றியதாகவும் கூறி, கடையில் வாங்கிய போலி கோப்பை மற்றும் சான்றிதழைக் கொண்டு பலரை ஏமாற்றியுள்ளார்.
இதே காரணத்தைக்கூறி தனது தொகுதி எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அதனையடுத்து இம்மாதம் லண்டனில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நிதியுதவி செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட பலரிடம் நிதி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவரின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஏபிஜெ மிஷைல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் சரவணக்குமார், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதனையடுத்து ராமநாதபுரம் உளவுத்துறை போலீஸார் விசாரணையில், அவர் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியில் இல்லை என்றும், அவரிடம் வெளிநாடுகள் செல்வதற்கான பாஸ்போர்ட்டே இல்லை என்றும் தெரிய வந்தது. மேலும் அவர் வெளிநாடுகள் சென்று போட்டியில் பங்கேற்பதற்காக பலரிடம் பணம் வசூலித்ததும் அம்பலமாகியுள்ளது.
மேலும், சத்திரக்குடி பகுதியில் தினேஷ் குமார் என்பவர், இவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். அவரும் மோசடி குறித்த தெரிந்து தற்போது இது தொடர்பாக எஸ்.பி இடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் பொ. வீரக்குமரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Crime News