தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க திராவிட மாடல் ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருவதாக கடுமையாக சாடியிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம் அறிக்கையை பட்டியலாக வெளியிட்டுள்ளார்.
அதில், சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த தி.மு.க. ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக "திராவிட மாடல்" என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்' நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 18,000 ரூபாய் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. இது தி.மு.க. அரசின் முதல் துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா நோய்த் தாக்கத்திலிருந்து மக்கள் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஆண்டுக்காண்டு சொத்து வரியை உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது தி.மு.க. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது தி.மு.க. அரசு. இது தி.மு.க. அரசின் இரண்டாவது துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி அடுக்கடுக்காக 7 துரோகங்களை கூறி மொத்தத்தில், தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க 'திராவிட மாடல்' ஆட்சி பயன் தராது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள். அவர்களுக்கு "வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது?" என்ற வித்தியாசம் தெரியும். தமிழர்கள் தங்களுடைய மனக் குமுறலை தி.மு.க. அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.