முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலில் உயர் நீதிமன்றம்; அடுத்து தேர்தல் ஆணையம்- இபிஎஸ்ஸுக்கு இருமுனைகளில் செக்வைக்கும் ஓபிஎஸ்

முதலில் உயர் நீதிமன்றம்; அடுத்து தேர்தல் ஆணையம்- இபிஎஸ்ஸுக்கு இருமுனைகளில் செக்வைக்கும் ஓபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னுடைய சம்மதமின்றி பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்டுள்ள அடுத்த நடவடிக்கை அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்துவது சட்ட விரோதமானது என்று ஓ. பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு ஓ. பன்னீர் செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிமுக லெட்டர் ஹெட்டில் சட்ட விரோத அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி கட்சிக்கு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். நிர்வாகத்திற்கு இவர்கள் இருவரும்தான் முழு பொறுப்பு. அந்த வகையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னுடைய சம்மதமின்றி பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு சட்டத்திற்கு விரோதமானது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 11-07-2022 அன்று நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான சிவில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த தீர்மானங்களில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனவே, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமானது என்பதை குறிப்பிடுகிறேன்.

எனவே, இந்த விபரங்களை கவனத்தில் கொண்டு அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் முதல் சசிகலா வரை... அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியில் நீடித்தவர்கள் யார் யார்?

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ள அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்திலும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவசர வழக்காக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஒருவேளை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் கருத்தைக் கேட்க வாய்ப்பிருந்தால் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளது அதில் எதிரொலிக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு பல தரப்பிலிருந்து செக் வைக்கும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார்.

First published:

Tags: ADMK, OPS - EPS