நான் ஓட்டை பிரிக்க வந்த ஆளில்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை கேகே நகரில் நாம் தமிழர் கட்சியின் "தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ’பிற மொழியாளர்களுக்கு இருக்கும் அரசியல் பாதுகாப்பு அங்கீகாரம் கூட ஆதி தமிழ்க் குடிகளான வண்ணார், குயவர், தச்சர் போன்ற சமூகங்களுக்கு இல்லை என்றும் நாங்கள் வந்த பிறகுதான், தேடித்தேடி அவர்களை தேர்தலில் நிற்க வைக்க வாய்ப்பு அளித்தோம். இவர்கள் சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு கூட போராட வேண்டியிருப்பதாக கூறினார்.
திமுக அரசு காங்கிரஸ் கட்சிக்கு பயந்து சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டு காலப் போராட்டம், சிறையிலிருந்து சிறப்பு முகாம் என்ற சித்ரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல. சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் உள்ளது. இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வரும் 23ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் என்ன திறன் உள்ளது? அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது; அதனை செயலாக்கம் செய்ய வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதில் இங்கு பிரச்சனை இல்லை. அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் அது தான் முக்கியம்.
பாஜகவின் பி டீமாக செயல்பட்டு திமுகவின் ஓட்டை பிரிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சீமான், நான் ஓட்டை பிரிக்க வந்த ஆளில்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள்! நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். அதற்கு நான் திமுகவின் பி டீமாக ஆகிவிடுவேனா. அரசியலில் நான் தான் ராஜா, நாங்கள் தான் நம்பர் ஒன் என சீமான் கூறினார்.
தமிழர் நாட்டில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வரவில்லை. இது போன்ற ஒரு கேவலம் அவமானம் எந்த நாட்டில் நடைபெற்றுள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு அரசு இதன் மீது கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் நேரங்களில் அளித்த அனைத்தும் வெற்று வாக்குறுதி என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.