முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமெரிக்காவை அதிரவைத்த நித்யானந்தா... சிஸ்டர் சிட்டி என்ற பெயரில் மோசடி

அமெரிக்காவை அதிரவைத்த நித்யானந்தா... சிஸ்டர் சிட்டி என்ற பெயரில் மோசடி

நித்யானந்தா

நித்யானந்தா

இந்திய அரசால் தேடப்படும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரிந்துணா்வு ஒப்பந்தம் என்ற பெயரில் "சிஸ்டர் சிட்டி" மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பாலியல் வழக்குகளில் சிக்கி சிறை செல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென வெளிநாட்டக்கு தப்பியோடினர். சில மாதங்களில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டியதோடு, ”எனக்கென ஒரு நாடு, எனக்கென தனி மக்கள்” என தனி பாஸ்போர்ட், கொடி மற்றும் ரூபாய் நோட்டுகளையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினர்.

முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என சவால் விடும் விதமாக அவ்வப்போது யூடியூப்பில் தோன்றி ஆன்மீக பேருரைகளையும் நிகழ்த்தி வந்தார். இடையில் உடல்நிலை மோசமடைந்து இலங்கையிடம் மருத்துவ உதவி கோரிய சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில்தான் ஐ.நா பக்கம் நித்யானந்தா பார்வை திரும்பியது. கைலாசா நாடு சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என பெண் தூததர்களையும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

குறிப்பாக கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக விஜய பிரியா நித்யானந்தா நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போட்டோக்கள் நித்தியானந்தாவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட வைரலாகின.

அதன் பின்னர்தான், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதிக்கிறது என்பது தெரியவந்தது. இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்து விட்டது, “வெற்றி வெற்றி” என கைலாசா சார்பில் கூப்பாடு போடப்பட்டது அம்பலமானது.

ஐ.நா சபையில் கைலாசாவுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து. கைலாசாவின் அடுத்த இலக்கு அமெரிக்கா பக்கம் திரும்பியது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நேவார்க் நகரம்-கைலாசா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்யானந்தா சீடர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் உள்ள சமூகங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களுக்கும் இடையே உள்ள பல்வேறு கலாச்சாரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள 'சிஸ்டர் சிட்டிஸ்' என்ற அமைப்பின்படி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நெவார்க் நகர மேயர் ரஸ் ஜெ.பராக்கா மற்றும் கைலாசா பிரதிநிதி விஜய் ப்ரியா நித்தியானந்தா இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்து விட்டது என மீண்டும் தம்பட்டம் அடித்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங்களை பயன்படுத்தி கைலாசாவை தனி நாடாக கட்டமைக்கும் முயற்சிகளை அறிந்த நெவார்க் மேயர், தற்போது கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்துள்ளார்.

கைலாசாவால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறிய நேவார்க் நகர மேயர் கைலாசா ஒரு உண்மையான நாடு அல்ல என்பதை கண்டுபிடித்ததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நெவார்க் ஒரு மோசடிக்கு பலியாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read : மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி ? ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காவலர்... சூதுகவ்வும் பட பாணியில் அரங்கேறிய திருட்டு..!

இதில் வேடிக்கை என்னவென்றால் நேவார்க் நகரைப் போலவே விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் நகரம், ஒஹையோ மாகாணத்தில் உள்ள டேட்டன் நகரம், புளோரிடாவில் உள்ள பியூனா பார்க் உள்பட அமெரிக்காவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நகரங்களுடன் கைலாசா ஒப்பந்தங்களை செய்துள்ளது தெரியவந்துள்ளது. கைலாசா தொடர்பான தகவல்களை சரிபார்க்காமல் இந்த மாகாணங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க நித்யானந்தாவின் பெண் தூதர்கள் மேலும் பல நகரங்களை அணுகி ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தியதும் அம்பலமாகி உள்ளது. தற்போது நெவார்க் நகரைப் போலவே மற்ற நகரங்களும் தங்களது ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதன் மூலம் ஒப்பந்தங்கள் மூலம் தனி நாடு அந்தஸ்தைப் பெறும் கைலாசாவின் முயற்சி தற்போது தவிடுபொடியாகியுள்ளது. இந்தியாவுக்கு சவால் விடுத்து வந்த கைலாசா தற்போது அமெரிக்காவையும் அசைத்துப் பார்த்திருக்கும் சம்பவம் உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

First published:

Tags: America, Nithyanandha, UN