தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க மின்வாரிய தொழிற்சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய விகித உயர்வு குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் மின்வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் மின் வாரிய செயலாளர் ஆ.மணிக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், " மின் வாரிய பணியாளர்களுக்கு 1.12.2019 நாளன்று பெறுகின்ற ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு, நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேபோல, 1.12.2019ம் நாளன்று, பத்து வருடங்கள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையினால் மாநில அரசுக்கு தோராயமாக 527 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உன்னதமான ஊதிய உயர்வினை வழங்கிய, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின் வாரிய தொழிலாளர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electricity, Senthil Balaji, TNEB