கொரோனா பாதிப்பின் தன்மை என்பது உயர்ந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் போதுமான அளவுக்கு படுக்கை, ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் திமுக சார்பில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் சே.சிந்தன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பின்னர் சாலையில் சென்றவர்களுக்கு இளநீர் வழங்கினார். அதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அங்கன்வாடியை சிறுவர்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கன்வாடி சிறுவர்களை வைத்து குத்துவிளக்கேற்றிய பின்னர் சிறுவர்களுக்கு விளையாடுவதற்கான பொம்மைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் கொரோனா வைரஸில் புதிய உருமாற்றம் பெற்று இருக்கிற எஸ்பிபி, பிஏ 2 என்கின்ற வைரஸ்கள் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் துபாய், சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் ரேண்டமாக 2 சதவீதம் பரிசோதனை செய்யப்படும்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவரை இரண்டு மூன்று நாளுக்கு ஒருவருக்கு பாதிப்பு என்கின்ற அந்த அளவில் இருந்தது.
இப்போது தினந்தோறும் 8, 10 பேருக்கு அந்த பாதிப்பு இருந்து கொண்டிருக்கிறது. எனவே உலகம் முழுவதும் இந்த பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. நேற்று இந்தியா முழுவதும் சுமார் 2400-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் தினம்தோறும் 400, 500 என்கிற அளவிலான பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைக்கு 112 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
4,000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யும்போது 112 பேருக்கு பாதிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் அதிகமாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் இந்த பரவலை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய இருக்கிறது.
சமூக விழாக்களாக இருந்தாலும், சமுதாய விழாக்களாக இருந்தாலும், அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் அங்கே பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக் கவசங்களை அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சோப்புகளால் கழுவி கொள்வது போன்ற இந்த விதிமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடிப்பது என்பது நல்லது.
அந்த வகையில் இன்றைக்கு ஒட்டுமொத்தமாகவே இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பின் தன்மை உயர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் மிதமான பாதிப்பே இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்னைக்கு போதுமான அளவுக்கு படுக்கைகள், ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளது.
இன்றைக்கு ஒரு திடமான திடகாத்திரமான மனநிலை இல்லாதவர்களாக இருப்பது என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. வாழ்ந்தே தீர வேண்டும், வாழ்ந்தாக வேண்டும், வாழ வேண்டும் என்கின்ற அந்த உறுதி தன்மை எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் : முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவிகள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Ma subramanian