முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா...? எப்படி கண்டறிவது...? பாதிப்புகள் என்ன?

மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா...? எப்படி கண்டறிவது...? பாதிப்புகள் என்ன?

மாம்பழம்

மாம்பழம்

Mango Fruit | மருந்துகள் அதிகம் தோலில் தான் தங்கிவிடும் என்பதால் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாம்பழங்களை வாங்கும் போது அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது?... அத்தகைய மாம்பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

முக்கனிகளின் முதன்மையான மாம்பழத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. சிறுவர்கள் முதல் முதியோர் வரை விரும்பி உண்ணக்கூடிய மாம்பழத்தில், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுக்கும் பஞ்சமே இல்லை. தற்போது மாம்பழ சீசனையொட்டி, சேலம், தருமபுரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறியவர் முதல் முதியோர் வரை விரும்பி உண்ணும் மாம்பழங்களை, சீசனைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைப்போர், அதை கிட்டத்தட்ட நஞ்சைப் போலவே மாற்றிவிடுகின்றனர்.

பொதுவாக மாம்பழங்கள் பழுக்க 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்பதால், சில வியாபாரிகள் லாப நோக்கம் கருதி, ரசாயன முறையில் பழங்களை வேகமாக பழுக்க வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் கால்சியம் காா்பைடு கற்கள், சிலிக்கான் உள்ளிட்ட ரசாயனங்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி ஒவ்வாமை உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து ஒருவர் இவ்வகை மாம்பழங்களை உட்கொண்டால் புற்றுநோயில் கொண்டு போய் தள்ளும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்புப் துறை அதிகாரிகள், ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை பறிமுதல் செய்து வருகிறனர். வியாபாரிகள் தவறு செய்வது தெரியவந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பொதுமக்கள் மாம்பழங்களை கவனமாக கண்டறிந்து வாங்குவது அவசியம் என அறிவுறுத்தும் அதிகாரிகள், அதற்கான வழிமுறைகளையும் விளக்குகின்றனர்.

முழுக்க முழுக்க மஞ்சளாக இருந்தால் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்கிறார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார். பழங்களை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் மீண்டும் குழாய் நீரில் நன்றாக கழுவி உட்கொண்டால் ரசாயனங்களின் வீரியம் குறையும். மருந்துகள் அதிகம் தோலில் தான் தங்கிவிடும் என்பதால் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது... இன்னும் சிறந்த வழி என்னவென்றால், மாங்காய்களை வாங்கி வீட்டிலேயே பழுக்க வைத்து உண்ணலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

top videos
    First published:

    Tags: Mango