தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டையும் தெரிவித்துள்ளது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை வெளியாகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில், கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்ட 32 ஆயிரம் பெண்களின் கதை என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் நீட்சியாக தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, படம் கேரளாவில் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் வாதிட்டார். மேலும், தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்த நிலையில், அதனை எதிர்த்து தான் வழக்கு தொடர முடியும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, கேரளாவில் மத மாற்றம் நடைபெறாத நிலையில், தவறான தகவலை வைத்து படம் எடுக்கப்பட்டதாக மனுதாரரர் கூறினார்.
இதையும் வாசிக்க: ஆருத்ரா மோசடி வழக்கு... நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கம்...!
மேலும், படத்தின் டீசரில் உண்மைக் கதை என்று கூறி விட்டு, ஊடகங்களில் கற்பனைக் கதை என்று இயக்குநர் பேட்டி அளித்ததாக மனுதாரர் தெரிவித்தார். இதனிடையே திரைப்படத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை என்று கூறப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக இயக்குநர் எப்படி முடிவுக்கு வந்தார் என்று கேள்வி எழுப்பினர். மேலும், படம் வெளியாக கூடிய இறுதி கட்டத்தில் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும் அவர்கள் வினவினர். இவ்வழக்கு கேரளா உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ள போது, நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. திரைப்படத்தை வெளியிடலாமா, வேண்டாமா என்பது குறித்து இன்று இரவு ஆலோசனை நடைபெறுகிறது. 10 மணி அளவில் அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madras High court