முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது.. புதைத்த பிணத்தை எடுக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது.. புதைத்த பிணத்தை எடுக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பட்டா நிலத்தில் புதைத்த பிணத்தை தோண்டி எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :
  • Thiruvallur, India

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தங்களது கிராமத்தில் மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாகப் பட்டா நிலத்தில் புதைத்தாக குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

எனவே பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல எனவும், நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு தான் உடல் புதைக்கப்பட்டதாகவும் ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

இந்த நிலையில், உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட, பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலைப் புதைக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், கிராமத்தில் மயானம் இல்லை என்றால், அரசு நிலத்தை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் தான் அந்த நிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெகதீஷ்வரி கணவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைக்காகப் பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: Madras High court