முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி போலீசில் எழுத்துப் பூர்வ புகார்

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி போலீசில் எழுத்துப் பூர்வ புகார்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

கலாஷேத்ரா பாலியல் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கடளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார் டி.ஜி.பி சைலேந்திர பாபு.

இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், இதை பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பிக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் புதன் கிழமையன்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேரடியாக கலாஷேத்ராவுக்கு வந்து அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

அதே போல் கலாஷேத்ராவின் தற்போதைய இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து பேசியுள்ளார். இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் தொல்லை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தேசிய மகளிர் ஆணையமே தாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு செய்தி அறிவித்தோம். அந்த விசாரணையை முடித்து விட்டோம் என 25-3-2023 அன்று டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் தொல்லை விவகாரம்... சீமான் கொந்தளிப்பு

அரசை பொருத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

top videos

    இந்தநிலையில், கலாக்ஷேத்ரா விவகாரம் தொடர்பாக முன்னாள் மாணவி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளார். கடந்த 2017 ம் ஆண்டிலிருந்து உதவி பேராசிரியர் வாட்ஸ் ஆப் போன் காலில் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை என புகாரில் தெரிவித்துள்ளார்.

    First published: