கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் பேராசிரியர்களுக்கு எதிராக கைதான பேராசிரியர் ஹரிபத்மன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக எழுந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவிகளின் போராட்டம் வெடித்ததையடுத்து, மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பாலியல் புகார்களை முன்வைத்தனர். இந்நிலையில் முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் புகார் அளித்தார்.
அதில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் அளித்த வாக்குமூலத்தில் பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கிறார். பரதம் உடல் முழுவதும் அசைவுகளை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான கலை, அதை கற்கும் போது பெண்கள் முதலில் தங்கள் கூச்சங்களை விட வேண்டும்.
பரத நாட்டியம் கற்றுக் கொடுக்கும் போது மாணவியருக்கு இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கற்பிக்க வேண்டியது அவசியம். அப்போது எதிர்பார்த்த வடிவம் இல்லை என்றால் உடலின் சில பகுதிகளில் கை வைத்துதான் கற்றுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றும் ஹரிபத்மன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கலையை கற்கும் போது ஆசிரியருக்கும் மாணவருக்கும் கலையின் மீது மட்டுமே கவனம் இருக்கும். அப்போது இருவருக்குமே மனச் சிதறல் இருக்காது. சில நேரங்களில் பரத நாட்டியத்தில் கை விரல் மூலமாக காட்டப்படும் முத்திரைகளில் தவறு இருந்தால், அதை தொட்டு தான் சரி செய்ய முடியும். அவற்றையே தற்போது தவறு என்று புகார் அளித்து இருப்பதாக பேராசிரியர் ஹரிபத்மன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார்.
கட்டாயம் வாசிக்க: ’கலாஷேத்ரா முன்னாள் மாணவி நான்..’ பாலியல் தொல்லை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பிக்பாஸ் அபிராமி.. கொதித்தெழுந்த சின்மயி!
மாணவிகளுக்கு அனுப்பிய மெசேஜ்களில் தவறான எண்ணம் எதுவும் இருப்பதாக தெரிந்தால் தனக்கு தண்டனை வழங்குமாறு சவால் விட்டுள்ளார் ஹரிபத்மன். பரத நாட்டியத்தில் நான் மிகவும் நேர்த்தியாக இருப்பதால் பேராசிரியைகள் பலருக்கும் என் மீது பொறாமை உள்ளது. கலாஷேத்ராவில் பேராசிரியர்கள் மத்தியில் தொழில் போட்டி மட்டுமல்லாமல் அதிகாரப் போட்டியும் அதிகமாக உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ஹரிபத்மன்.
அதிகார போட்டியில், சிலர் என்னை இந்த புகாரில் தள்ளி இருப்பதாக உணருகிறேன். நியாமாக விசாரித்தால் உண்மை வெளிப்படும் என்று பேராசிரியர் ஹரிபத்மன் வாக்குமூலத்தில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai