திருக்கோயில் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தபால் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் திருக்கோயில் தகவல்களை பக்தர்கள் எளிதாக அறியும் வகையில் திருக்கோயில் செயலி தொடங்கப்பட உள்ளது. இந்த இரண்டு திட்டத்தையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
திருக்கோயில் பிரசாதங்களை அஞ்சல் மூலம் வழங்கும் திட்டம்
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 48 முதுநிலை திருக்கோயில்களில் பக்தர்களின் விருப்பப்படி அர்ச்சனை செய்து, பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அனுப்பி வைத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் பக்தர்கள் பிறந்தநாள், திருமண நாள் அல்லது விரும்பும் நாட்களில் தங்களுக்கும், விரும்பும் நபர்களின் பெயரிலும் திருக்கோயில் பிரசாதத்தை அஞ்சல் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
திருக்கோயில் செயலி திட்டம் :
தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு போன்ற பன்முக தகவல்களின் பெட்டகங்களாக திகழ்கின்றன. அத்தகைய திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் "திருக்கோயில்" என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருக்கோயில்கள் குறித்த தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம். பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, வழித்தடம், பக்தர்களுக்கான தங்கும் வசதி, சக்கர நாற்காலி வசதி, கழிப்பறை, குளியல் அறை, பொருட்கள் வைப்பறை போன்ற பல்வேறு வசதிகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். அதேபோல, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் திருக்கோயிலுக்கு செல்லுகையில் மின்ஊர்தி, சாய் தளத்தில் நாற்காலி வைத்து அழைத்து செல்வதற்கு தரப்பட்டுள்ள தொலைபேசி எண் போன்ற கட்டணமற்ற சேவைகளையும் இந்த செயலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
அன்னதானம் திருப்பணி உள்ளிட்ட எவ்வகை நன்கொடைக்கும் இந்த செயல் மூலம் கொடை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலியைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ’அஞ்சல் வழி பிரசாத சேவை திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்தியாவில் எங்கிருந்தும் கோவில் பிரசாதங்களை பெற்று கொள்ளலாம். இன்னும் மூன்று மாதத்தில் உலகில் எந்த நாட்டில் இருந்தும் திருக்கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர் கோவில் பிரசாதத்தை காஸ்மீரில் இருப்பவர்கள் இனி வாங்க முடியும்.
எந்தெந்த ஊர்களில் எந்தெந்த கோவிலில் எந்தெந்த உணவு சிறப்போ அதுவே பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக பிரசாத கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. கூடுதலாக கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் முறைகேடு குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.
உச்சநீதிமன்றமே அறங்காவலர் நியமனம் குறித்த இந்து சமய அறநிலையத்துறையில் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளது.
தொழிலாளர் அணி எங்களுக்காக விட்டுக்கொடுத்தது... அன்பகம் கட்டிடம் பெற்றதை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் முதல் கட்டமாக 48 முதல் நிலை கோயில்களில் நடைபாதைகளும் வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். அடுத்த மூன்று மாதத்தில் 48 முதுநிலை கோவில்களை மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மாற்ற உள்ளோம்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple