முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி ? ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காவலர்... சூதுகவ்வும் பட பாணியில் அரங்கேறிய திருட்டு..!

மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி ? ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காவலர்... சூதுகவ்வும் பட பாணியில் அரங்கேறிய திருட்டு..!

காவலருடன் கும்பல் கைது

காவலருடன் கும்பல் கைது

சூதுகவ்வும் படப்பாணியில் காவலர், திருட்டு கும்பலை சேர்த்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூதுகவ்வும் பட பாணியில் மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என வகுப்பெடுத்து கொள்ளையை ஒரு கும்பல் அரங்கேற்றி உள்ளனர். இந்த கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதே ஒரு காவலர் என்பதுதான் இதில் ஹைலைட்.. காலையில் போலீஸ் ஸ்டேஷன், இரவில் வீடு புகுந்து கொள்ளை என, திருடன் போலீஸ் ஆட்டம் ஆடிய காவலரின் பற்றி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் கடந்த 2021ம் ஆண்டு இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு தொடர்பாக  செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளியான செந்தில்குமாரை வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து அழைத்து வருவது, மீண்டும் சிறைக்கு கொண்டு சென்று விடுவது போன்ற பணிகளை முதல்நிலைக் காவலர் ராஜீவ் காந்தி என்பவர் மேற்கொண்டிருந்தார். அவ்வாறு அழைத்து வரும் போது, காவலர் ராஜிவ்காந்திக்கும், குற்றவாளி செந்தில்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது வழக்கில் சிக்காமல் திருடுவது எப்படி? சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை நோட்டம்விட்டு திருடுவது எப்படி? என செந்தில்குமாருக்கு பல்வேறு ஐடியாக்களைக் கொடுத்து அறிவுரைகளை காவலர் ராஜிவ் காந்தி வழங்கியுள்ளார். திருட்டு வழக்கில் செந்தில்குமாருக்கு தண்டனை கிடைத்த நிலையில், தண்டனை முடிந்த பிறகு தன்னை வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சிறையிலிருந்து வெளி வந்த செந்தில்குமார் நேராக முதல்நிலைக் காவலர் ராஜீவ்காந்தி வீட்டிற்குச் சென்றுள்ளார். செந்தில்குமார் உள்ளிட்ட சில ரவுடிகளை பெருந்துறையில் உள்ள தனது மளிகைக் கடை மாடியில் தங்க வைத்து எப்படி திருடுவது என டியூஷன் எடுத்துள்ளார். அதன்பிறகு அவர்கள் திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து திலகமிட்டு வழியனுப்பி வைத்துள்ளார்.

இந்த கும்பல் பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி வந்தது. காவலர் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி சிசிடிவி இல்லாத பகுதிகளில் இந்த கும்பல் திருடி கைவரிசை காட்டி வந்தது. குற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் அவ்வப்போது குற்றவாளிகளுக்கு கொடுத்து எச்சரித்து வந்துள்ளார் காவலர்.

Also Read : சுற்றுலா போக ப்ளானா? கொடைக்கானலில் இந்த பகுதிக்கு மட்டும் போகாதீங்க..!

இந்நிலையில், காவலரின் மளிகைக்கடை மாடியில் குற்றவாளிகளின் நடமாட்டம் இருப்பதாக காவல் ஆய்வாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மளிகைக் கடையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மற்றும் கருப்புசாமி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த முதல்நிலைக் காவலர் ராஜீவ் காந்தியும் கைது செய்யப்பட்டார்.

அவர்களிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கார், இரண்டு பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இந்த கும்பல் பெண்கள் உடையணிந்து சென்று திருடியதும் அம்பலமானது. அவர்களிடமிருந்து திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெண்களின் ஆடைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிச்செட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Erode, Theft