முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள்... அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பில் நடந்தது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள்... அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பில் நடந்தது என்ன?

அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு

அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு

Edappadi Palaniswami Met Amit Shah | ஒட்டு மொத்தத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக தொடங்கியுள்ளதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட கூட்டணி, அடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்தது. எனினும் அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன.

டெல்லி பாஜக தலைமையுடன், அதிமுக தலைவர்கள் சுமுகமான உறவை கொண்டிருந்தாலும் தமிழக பாஜக தலைவர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வார்த்தை மோதல் நீடித்து வந்தது. குறிப்பாக பாஜக தமிழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்த பிறகு, இந்த மோதல் சற்று அதிகமானது. இது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைததேர்தலிலும் எதிரொலித்தது. இச்சூழ்நிலையில், நியூஸ்18 ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடருகிறது என்றார்

அமித் ஷா இப்படி கூறியிருந்தாலும், தமிழக பாஜக அதிமுக இடையேயான உரசல் இருந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறிய நிலையில், சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பற்றி தன்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என்றார். அதேநேரத்தில் டெல்லி பாஜக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியிலிருந்து வேட்பாளரை திரும்பப்பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தேர்வான பிறகு முதன்முறையாக நேற்று டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி.  நேற்று இரவு அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, அண்ணாமலையும் உடன் இருந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழக பாஜக, அதிமுக இடையேயான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

குறிப்பாக, நாம் பிரிந்து இருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.

இனி வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்பட வேண்டும் என விவாதித்ததாகவும் தெரிகிறது. ஒட்டு மொத்தத்தில் அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக தொடங்கியுள்ளதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க; டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பயண திட்டம் இதுதான்... முழு விவரம்..!

top videos

    இந்த சந்திப்பின் போது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட தொகுதி பங்கீட்டு குழப்பங்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்தால், தேர்தல் பணிகளை தொடங்க ஏதுவாக இருக்கும் என பாஜக கூறியதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூடுதலாக தொகுதிகளை கேட்டதாகவும் கூறப்படுகிறது. அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்த தகவல்களை, டெல்லியில் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி விரிவாக வெளியிடுவார் எனத் தெரிகிறது.

    First published:

    Tags: AIADMK, Amit Shah, BJP, Edappadi Palaniswami