முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுச்செயலாளர் வழக்கு; உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பு தீவிர வாதம்

பொதுச்செயலாளர் வழக்கு; உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பு தீவிர வாதம்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னையில் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்தார். அதனையடுத்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தொடர்வதற்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விதிகளுக்கு எதிரானது என வாதிட்டார். அவரை நீக்கியது தவறு என்றால், அதன்பின் நடந்த நடைமுறைகளும் தவறு எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கியதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கட்சியில் உள்ள உரிமையை பாதுகாக்கும் வகையில் வழக்கு விசாரணை முடியும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதே கோரிக்கை மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் சார்பிலும் வைக்கப்பட்டது.

அ.தி.மு.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டே பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டதாக வாதிட்டார். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 10 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை பெற வேண்டிய நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 5 சதவீத ஆதரவு கூட இல்லை எனவும் தெரிவித்தார்.

பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய அதிமுக

top videos

    மேலும், சட்டமன்றத்திலும் ஓ.பன்னீர் செல்வம் இருக்கையை மாற்றக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் பிரதான வழக்கில் தாக்கல் செய்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றைய தினம் இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Edappadi Palaniswami, O Panneerselvam