சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் துண்டினை வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சேரும்போது பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்து உள்ளது. பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = 0 என்று தான் இருக்கும். ஒருவரை ஒருவர் துரோகி என்று குறிப்பிட்டார்கள். இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாக கூறியுள்ளனர்.
துரோகி என்றாலே எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தினகரன் கூடாரம் காலியாகிவிட்டது. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலை தான் தற்பொழுது உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ’பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்குமே விசுவாசமாக இருந்ததில்லை. ஜெயலலிதா இருந்தபோது கட்சியிலிருந்து விலகி சென்றார். பின்னர் பாமகவில் போய் சேர்ந்தார். அந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் தேமுதிக கட்சிக்கு சென்றார். அங்கும் விசுவாசமாக இல்லாமல் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியளிப்பது விந்தையாக உள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சி முடிந்துவிடும். அப்படித்தான் இதுவரை நிலை. அவர் நிழல் கூட உடன் வரவில்லை.
அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததாகவும் இவரால் தான் அதிமுக இயங்கி வந்ததாகவும் மாயத் தோற்றத்தை உருவாக்கி பேட்டி அளிக்கிறார். ஒரு கிளைச் செயலாளர் உள்ள தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இல்லை என்று கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் திமுகவிற்கு பி டீமாக செயல்படுகிறார் என்று கூறியிருந்தேன். அது நிரூபணம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அணி விளையாடிய போது ஓ.பன்னீர் செலவம் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளார். திமுகவை நிர்வகிப்பது சபரீசன் தான். என் மீது ஏற்கனவே ஆர்.எஸ்.பாரதி பொய்யான வழக்கு தொடர்ந்தார்.
டென்டரில் முறையீடு என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது வழக்கை திரும்ப பெற்றனர். இவர்கள் செய்த ஊழல்களை மறைப்பதற்காக எங்கள் மீது வழக்கு போட்டு வருகின்றனர். எந்தவித உண்மையும் இல்லை. அதிமுக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று நிரூபணம் செய்துள்ளோம் என்றார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, ஊழலின் வெளிப்பாடு தான். அமைச்சரவை ஏன் மாற்றம் செய்யப்படுகிறது. ஒரே ஒரு ஆடியோவால் அரசாங்கம் ஆடிப் போய்விட்டது. ஒரு விக்கெட் போய்விட்டது. அமைச்சரவை ஆடிப்போய் உள்ளது. திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஊழலைத் தவிர வேற எதுவும் செய்யவில்லை. எல்லாம் துறைகளிலும் ஊழல். இதனால் நிதி அமைச்சர், தகவல் தொழில் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முப்பதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார். இன்னும் நிறைய ஆடியோக்கள் வரும் என்று சொல்லி உள்ளனர். அவ்வாறு வந்தால் நிறைய செய்திகள் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளில் திமுக செய்த சாதனை 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்தது தான் எனவும் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீக்கப்பட்டால் இன்னும் நிறைய செய்தி வந்துவிடும். பணம் எங்கெங்கு உள்ளது என்று சொல்லிவிடுவார் என்று நீக்காமல் உள்ளதாக தான் கருதுகிறேன். ஏற்கெனவே உள்துறை அமைச்சரிடம் தமிழகத்தில் ஊழல் பட்டியலை தெளிவாக தெரிவித்துள்ளோம்.
மத்திய அரசு முழு கவனம் செலுத்தியுள்ளது. ஆடியோ மூலமாக ஒரு நிதியமைச்சர் கூறும் போது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை அதிமுக செய்யும். இதே போல் ஆவினில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. அதிகார துஷ்பியோகம் நடைபெற்றுள்ளது.
இதனால் பால் உற்பத்தி அல்லது கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறியிருந்தோம். அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதையெல்லாம் உண்மை என்று நிரூபிக்கும் விதமாக திமுக அரசு அமைச்சர் நாசரை நீக்கி உள்ளது என்றார்.
மத்திய குற்றப்பிரிவு வழக்கு தொடர்பான கேள்விக்கு என் மீது எந்த சொத்தும் கிடையாது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த சொத்தும் என் மீது இதுவரை வாங்கியதில்லை. அரசியல் ரீதியாக என் மீது எதுவும் செய்ய முடியவில்லை. புகார் தாரர் திமுகவை சேர்ந்தவர். திமுக தூண்டுதல் பேரில் வழக்கு தொடர்ந்து உள்ளார். சட்ட ரீதியாக சந்திப்பேன். இது முழுக்க முழுக்க விதிமீறல் ஆகவே பார்க்கிறேன். வழக்கு தொடர்ந்தால் ஒரு வருடத்தில் தொடர வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யாக பரப்புகின்ற தகவல் என பதிலளித்தார்.
அதிமுகவை நேசிப்பவர்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொள்வோம். துரோகிகளுக்கும், அதிமுகவுக்கு துரோகம் நினைப்பவர்களுக்கும் அதிமுகவில் இடமில்லை. தொண்டர்கள் தலைமை ஏற்று நடக்கும் கட்சி அதிமுக. தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை நிறைவேற்றுவோம்.
இதைச் செய்யவேண்டும்... அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அப்பா டி.ஆர்.பாலு கூறிய அறிவுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi Palaniswami