மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘தொழிலதிபர்களுக்கு அரசு அடிமை சாசனம் எழுதி உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளேன். எட்டு மணி நேரம் வேலை இருந்தால் தான் ஊழியர்கள் பணி செய்ய முடியும். அவர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல. 12 மணி நேரம் என்பது வேலை செய்ய முடியாது. இதற்கு கூட்டணி கட்சி சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதை எதிர்த்தார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைமை ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைமை இதுதான் ஸ்டாலின் உடைய பண்பாடாக உள்ளது.
சட்டசபையில் காவல்துறை பற்றி பேசினேன். 2 மணி நேரம் பேசிய இந்த விவரம் எந்த ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் செய்தி வரக்கூடாது என மிரட்டி தடுத்துள்ளார்கள். காவல்துறை என்பது முக்கியமான துறை. காவல் துறை சரியாக இருந்தால் தான் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இரண்டு மணி நேரம் பேசிய செய்தி முழுவதும் மக்களுக்கு தெரிவித்தால் தான் பிரதான எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட முடியும்.
இந்த ஜனநாயக நாட்டில் யாரை கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பத்திரிகைகளும், ஊடகங்களும் நடுநிலையோடு செய்தி ஒளிபரப்புங்கள் என கேட்டுக்கொண்டார். முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மைதான். இது பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய பேச்சில் இருந்தே தெரிகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடமும், மத்திய அரசிடமும் வலியுறுத்துவோம். நிதி அமைச்சரே பேசி உள்ளதால் அது உண்மையானதா போலியானதா என ஆய்வு செய்து விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்தார்கள். அதே போல் இந்த விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசி அவர், ‘இரண்டு ஆண்டுகளிலேயே இவ்வளவு கொள்ளையடித்துள்ளார்கள். இன்னும் மூன்று ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடிப்பார்கள். இருக்கின்ற பணம் எல்லாம் அவர்களிடம் தான் இருக்கும். எனவே அரசு இதனுடைய உண்மை தன்மையை ஆராய வேண்டும். நியாயமான தலைவர் என்றால் வலைதளத்தில் வந்த இந்த செய்தி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
அதிமுக எங்கள் தரப்பில் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையமும் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது. பத்திரிக்கையிலும் வந்திருக்கிறது. ஆனால் பத்திரிகையிலே இரட்டை இலை சின்னத்தையும் கொடியையும் பதித்து விளம்பரம் செய்வது எந்த விதத்தில் நியாயம். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை குழு ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். பத்திரிக்கையாளர்கள் தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். உண்மை செய்தியை வெளியிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அதிமுக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் விரக்தியின் விளிம்பிற்கு முதல்வர் சென்று விட்டார். ஊடக நண்பர்களும் பத்திரிக்கை நண்பர்களும் நடுநிலையோடு செய்தி வெளியிடுங்கள். கோடநாடு சம்பவம் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. கைது செய்ததும் அதிமுக தான். கொரோனா காலம் என்பதால் நீதிமன்றங்கள் செயல்படவில்லை. இதனால் வழக்கில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் இவர்களுக்கு ஜாமீன் கொடுத்தவர் யார் என்று பார்த்தால் திமுகவை சேர்ந்தவர்கள். திமுக நிர்வாகிகள் தான் கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு ஜாமீன் தர தயாராக உள்ளார்கள்.
பி.டி.ஆர் விளக்கத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்... சுதந்திரமான சோதனை செய்யாதது ஏன்? அண்ணாமலை கேள்வி
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திமுக வழக்கறிஞரே வாதாடி இருக்கிறார். இதுகுறித்து விசாரணை அறிக்கை இன்னும் வெளியே வரவில்லை. குற்றவாளிகளுக்கு ஏன் இவ்வளவு தரிசனம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தார்கள் ஏதாவது சொத்து வாங்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. காவல்துறையில் பல்வேறு உயரதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளார்கள். அதிமுக ஆட்சி வந்தவுடன் கோடநாடு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் அமித்ஷா மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் தான். எனவே அதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம். அமித்ஷா, நட்டா ஆகியோரிடம் தான் தேர்தல் குறித்து பேசி உள்ளோம். எப்போதும் அவர்களிடம் தான் பேசுவோம்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi Palaniswami, Palani