மதிமுகவை, தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்து விடலாம் என்று வைகோவிற்கு அக்கட்சியின் அவைத் தலைவர் துரைசாமி கடிதம் எழுதிய நிலையில், மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ இணைப்பு இல்லை என்று நியூஸ்18க்கு விளக்கம் அளித்துள்ளார்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் தங்களது அண்மைக் கால நடவடிக்கைகளால் மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக்க விமர்சித்துள்ளார்.
சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கட்சி உறுப்பினர்கள், தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மகனை ஆதரித்து, அரவணைப்பதும் தங்களின் சந்தர்பவாத அரசியலும் தமிழ்நாடு மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் இருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அன்று திமுகவில் தங்களுக்கு ஒரு இடர்பாடு வந்தபோது குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களைத் தூண்டி விட்டதாகவும், ஆனால், தற்போது அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்குக் கட்சியில் பொறுப்பு வழங்கத் தீர்மானம் நிறைவேற்றி வருவதாகவும் சாடியுள்ள துரைசாமி, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறுமலர்ச்சிக்கு தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தொண்டர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைந்து விடுவது சம கால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்றும் துரைசாமி சாடினார். அவரின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பரபரப்பை ஏற்படுத்தவே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை கிடையாது என்றும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ விளக்கமளித்துள்ளார்.
Also Read : வாங்காதப் பொருட்களுக்கு பில்... ரேசன் கடை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..!
மேலும், திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்குத் துளியும் உடன்பாடில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியதாகவும், மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.