அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் பிரச்னையில் தலையிட விரும்பவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நியூஸ் 18 தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சியின் தென் பிராந்திய ஆசிரியர் விவேக் மற்றும் நியூஸ் 18 கன்னட ஆசிரியர் நிகல் ஆகியோருக்கு அமித் ஷா பேட்டியளித்தார்.
பேட்டியின் போது ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றிணைய விரும்புகிறீர்களா என்ற நியூஸ் 18 கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தொடர்பான பிரச்னையில் தலையிட விரும்பவில்லை” என்று தெரிவித்தார். இது, அக்கட்சியின் உள்விவகாரம் என்று தெரிவித்த அவர், இருவரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்று அமித் ஷா விளக்கமளித்தார். மேலும், சுமுக முடிவை அமைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது அவர்களது முடிவு. அவற்றை, நான் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. வாரிசு அரசியலுக்கும், அரசியல்வாதியின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாஜக யாருடைய குடும்பப் பிடியிலும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.
தமிழ்நாட்டில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான விஷயத்தில் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் உண்டானது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், புதுடெல்லியில் நெட்வொர்க் 18 நடத்தும் ரைசிங் இந்தியா நிகழ்வில் பங்கேற்ற அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: இடஒதுக்கீடு அளவை 75% ஆக அதிகரிப்போம்... காங்கிரஸ் முக்கிய வாக்குறுதி...!
இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், அண்ணாமலையும் உடன் இருந்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழக பாஜக, அதிமுக இடையேயான பிணக்குகள் தீர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், அதிமுக கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்று அமித் ஷா நியூஸ்18 தொலைக்காட்சிக்கு மீண்டும் தெரிவித்துளளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Amit Shah To News 18