டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு குறித்து தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு குறித்து தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று டி.ஆர்.பி.ராஜா பேசினார். அதேபோல, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க உறுப்பினர்களும் நிலக்கரி சுரங்கம் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.