ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனபதற்காக சட்டப்பேரவை விதி 92 (vii) மற்றும் 287 ல் சில பதங்களை நிறுத்தி வைப்பதற்கான அரசினர் தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை வழங்க ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத்தலைவரை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். முன்னதாக ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தீர்மானம் என்பதால் சட்டமன்ற விதிகளில் சில பதங்களை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
அப்போது சட்டபேரவை விதி 92 (vii) ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநரைப் பற்றி பேசக்கூடாது என்பதையும், விவாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆளுநர் பெயரை பயன்படுத்துதல் கூடாது என்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என முன்மொழிந்தார். மேலும் சட்டப்பேரவை விதி எண் 287ல் அடங்கியுள்ள, பேரவையின் முன் உள்ள தீர்மானத்தை பொறுத்தவரை எந்த விதியையாவது நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை முன்மொழிய வேண்டும் எனவும், கூட்டத்திற்கு வந்து வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவ்விதியை நிறுத்தி வைக்கலாம் என்ற தீர்மானத்தையும் துரைமுருகன் முன்மொழிந்தார்.
இந்தத் தீர்மானத்திற்கு, அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரவையின் கதவுகள் மூடப்பட்டு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று அவைக்கு 2 பாஜக உறுப்பினர்கள் மட்டும் வந்திருந்த நிலையில் அவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Also Read: ஆளுநர் அரசியல்சட்டத்துக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்: அரசியல்கட்சிக்கு அல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், “திமுக சார்பில் சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.சரியான நேரத்தில் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். தீர்மானத்தில் கொஞ்சம் கூட பிசிரு இல்லாமல் நாகரிகத்தோடு நியாயத்தை எடுத்து உரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல் வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான் (அதிமுகவினர்). கவர்னர் பதவி என்பது தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றிய போதே பிரகடனப் படுத்தி இருக்கிறது. நாங்கள் எல்லாம் ஆளுங்கட்சியாக வருவோம் என தெரியாத காலத்திலேயே ஆளுநர் பதவி நாட்டுக்கு தேவை இல்லை என்று தெரிவித்தது திமுக.
மத்திய அரசு தங்களுக்குள்ள அரசியலமைப்பு சட்ட விதியை பயன்படுத்தி மாநில ஆட்சியை கலைப்பதற்கு தங்களுக்கு ஒரு ஏஜென்ட் வேண்டுமே என்று கவர்னர் பதவியை உருவாக்கினர். மேற்கு வங்கத்தில் அரசுக்கு எதிராக செய்ததால் தான் மக்களவை தலைவராக ஜெகதீப் தங்கர் ஆகியுள்ளார். அந்த ஆசை ரவிக்கும் ஏற்பட்டிருக்கலாம். உங்களுக்கு கட்சி கொள்கை இருந்தா ராஜினாமா பண்ணிட்டு போகலாம். மு.க.ஸ்டாலின்.. பாதி கருணாநிதி , பாதி அண்ணாவாக மாறி விட்டார். சட்டத்துக்கு எதிர்ப்பா இருப்பவர்கள் ஆளுநர் பதவிக்கு இல்ல இந்திய குடிமகனா இருக்கவே தகுதியில்லை ” என்று கடுமையாக விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assembly, Durai murugan, RN Ravi, Tamil News