முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நிலக்கரிச் சுரங்க விவகாரம்- நாடாளுமன்றத்தில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்

நிலக்கரிச் சுரங்க விவகாரம்- நாடாளுமன்றத்தில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்

டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அம்பாபுரம், நத்தமேடு, கிருஷ்ணபுரம், சின்னநத்தம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மைக்கேல்பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் அலிசுகுடி, பருக்கல், காக்காபாளையம் ஆகிய கிராமங்களில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் கவலையடைய வேண்டாம்... நிலக்கரி சுரங்கம் வராது... வேளாண் அமைச்சர் திட்டவட்டம்..!

top videos

    இந்தநிலையில், ’நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பிக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளனர். சுரங்க விவகாரத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

    First published:

    Tags: DMK