தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து அனைத்து தோழமைக் கட்சிகளும் சேர்ந்து நேரில் சந்தித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 8 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை பறிக்கும் வகையில் 12 மணி நேர வேலை என ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலைப்பாடு திமுகவின் தொழிலாளர் நலனுக்கும், கொள்கைக்கு, எதிராக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் திமுக மீதான நம்பகத் தன்மைக்கு எதிராக அமையும். நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும்.
ஆகவே முதல்வர் இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுகிறோம். தோழமைக் கட்சிகள் சார்பில் முதல்வரை சந்தித்து இது குறித்து கருத்துக்கள் வலியுறுத்து உள்ளோம். அனைத்து தோழமைக் கட்சிகளும் சேர்ந்து நேரில் சந்தித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம்.
இதையும் படிக்க : 12 மணி நேர வேலைக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு- தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை
கிறிஸ்துவம் தழுவிய ஆதிதிராவிட மக்களை இட ஒதுக்கீட்டு பிரிவினராக ஏற்க வேண்டும். மத்திய அரசுக்கு வேண்டுகோள் கொடுக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானம் முன்மொழிந்துள்ளது. இதனை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது. முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகா சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பது என தீர்மானித்துள்ளோம். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நானும் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொடூரமாக வன்கொடுமைகள் அரங்கேறக்கூடிய மாவட்டமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார்.
செய்தியாளர் : குமரேசன் (கிருஷ்ணகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Krishnagiri, Thirumavalavan, VCK