முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “அதிமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் உள்பட அனைத்திற்கும் அனுமதி” - தங்கம் தென்னரசு பதில்..!

“அதிமுக ஆட்சியில்தான் ஹைட்ரோ கார்பன் உள்பட அனைத்திற்கும் அனுமதி” - தங்கம் தென்னரசு பதில்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

  • Last Updated :
  • Chennai, India

நிலக்கரி சுரங்கம் தொடர்பாக சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் டெல்டாகாரன்தான். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவித்தார். சட்டமன்ற வளாகத்தில் இதுதொடர்பாக பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதே டெல்டாக்காரர்தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது என்று விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். நானும் டெல்டாக்காரன் தான் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தது அவருக்கு ஆதரவாகி விடக்கூடாது என்பதற்காக போகிற போக்கில் புழுதியை வாரி தூற்றிவிட்டு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என குற்றம்சாட்டினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது மாநில வருவாய் உயரும் என்ற ஒரு காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் காரணமாக எழக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தோம். நிலக்கரி திட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

மக்களுக்கு பாதிப்பு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

மீத்தேன் திட்டத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட அத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி யாருடைய ஆட்சியில் வழங்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்பிய அவர், “தன்னை ஒரு விவசாயி என ஊர் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க கூடியவரின் அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பிலிருந்த காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. தான் மீது வந்திருக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு, தான் தவறு செய்தவர் பிறரை நம்ப மாட்டார் என்ற அடிப்படையில், எல்லா தவறுகளையும் தாங்கள் செய்துவிட்டு அதை மூடி மறைக்கக்கூடிய வகையில் திமுகவின் மீது சேறு வாரி பூசக்கூடிய இந்த செயலை அதிமுகவும் அதனுடைய தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

top videos
    First published:

    Tags: Edappadi Palaniswami, Thangam Thennarasu